TAMIL
உலகின் சிறந்த பேட்ஸ்மேன் கோலி – இயான் சேப்பல்
* ஆஸ்திரேலிய அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது 4 வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ‘தீயணைப்பு படை வீரராக வேண்டும் என்று சிறுவயதில் ஆசைப்பட்டேன்’ என்று கூறியுள்ளார்.
அத்துடன் சிறுவயதில் நீங்கள் என்னவாக விரும்பினீர்கள் என்று ரசிகர்களிடமும் கேள்வி கேட்டுள்ளார்.
மற்றொரு உரையாடலில் வார்னர், ‘20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. தற்போதைய சூழலில் 16 அணிகளும் ஒரே இடத்தில் இணைவது கடினம்’ என்றார்.
* இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அளித்த ஒரு பேட்டியில், ‘டோனி முழு உடல்தகுதியுடன் உள்ளார். அவர் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
ஒரு ரசிகராக அவரது ஆட்டத்தை விரும்புகிறேன். அவர் விளையாடினால், எங்களது பணி எளிதாகி விடும்’ என்றார்.
* ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.
இந்த தொடர் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். கடந்த முறை இந்திய அணி தொடரை வென்றதால் நம்பிக்கையுடன் வருவார்கள்.
ஆனால் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி இருப்பதால் இந்த முறை இந்தியாவுக்கு கடினமாக இருக்கும்.
இவர்கள் இருவரையும் சீக்கிரம் வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறலாம்.
இல்லாவிட்டால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும். மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய கேப்டன் விராட் கோலி ரன் குவித்து வரும் விதம் வியப்பூட்டுகிறது.
தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் அவர் தான்’ என்றார்.
* ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த சீசனுக்கான எஞ்சிய ஆட்டங்களை ஜூன் 20-ந்தேதி தொடங்கி 5 வார காலத்துக்குள் நடத்தி முடிக்க ஸ்பெயின்
கால்பந்து சம்மேளனம் முடிவு செய்து இருப்பதாக அந்த போட்டியில் விளையாடும் அணிகளில் ஒன்றான லிகான்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜாவியர் அகுரே தெரிவித் துள்ளார்.
* இந்திய இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அரியானாவைச் சேர்ந்த மானு பாகெர் கூறுகையில், ‘துப்பாக்கி சுடுதலில் இலக்கை கணக்கிடும் புதிய எலக்ட்ரானிக் எந்திரம் சமீபத்தில் எனக்கு கிடைத்தது.
அதை எனது வீட்டில் பொருத்தி உள்ளேன். இது எனது பயிற்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பழைய எந்திரத்தில் நிறைய கோளாறு இருந்தது.
அதை அடிக்கடி சரி செய்ய வேண்டி இருந்தது. இனி புதிய எந்திரத்தில் துல்லியமாக கணக்கிட முடியும். ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
தொடர்ந்து நல்ல பார்மில் இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இது மிகவும் கடினமான காலக்கட்டம் தான். ஆனால் எதிர்மறை எண்ணம் என்னிடம் இல்லை. மனரீதியாக தயாராக இருக்கிறேன்’ என்றார்.