TAMIL

‘எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டாயே’ – ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை தன்னிடம் புலம்பியதாக யுவராஜ் தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலக்கட்டத்தில் தனது முந்தைய ருசிகர அனுபவங்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகிறார்.

2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கி சரித்திர சாதனை நிகழ்த்தினார்.

அச்சாதனையை நினைவு கூர்ந்துள்ள யுவராஜ்சிங் கூறியதாவது:-

அந்த ஆட்டத்தில் முந்தைய ஓவரில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாப் என்னை சீண்டி வெறுப்பேற்றினார். அவர் ஏதோ சொல்ல, நானும் சில வார்த்தைகளை உதிர்த்தேன்.

இதனால் கூடுதல் உத்வேகத்தில் இருந்த நான் ஸ்டூவர்ட் பிராட் வீசிய அடுத்த ஓவரில் 6 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்தினேன்.

இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

ஏனெனில் முந்தைய வாரத்தில் தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் மாஸ்கரனாஸ் எனது பந்து வீச்சில் ஒரே ஓவரில் 5 சிக்சர் அடித்திருந்தார்.

இந்த ஆட்டத்தில் நான் 6-வது சிக்சர் தூக்கியதும் முதலில் பிளின்டாப்பை தான் நோக்கினேன்.

அடுத்து மாஸ்கரனாஸ் பக்கம் திரும்பினேன். அவர் என்னை பார்த்து சிரித்தார்.

இந்த தொடரில் ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை கிறிஸ் பிராட் போட்டி நடுவர்களில் ஒருவராக பணியாற்றினார்.

அவர் மறுநாள் என்னிடம் வந்து, ‘ஏறக்குறைய நீ எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து வைத்துவிட்டாய்.

இப்போது அவனுக்கு நீ கையெழுத்திட்டு ஒரு பனியனை தருவாயா?’ என்று கேட்டார்.

நான் இந்திய அணிக்குரிய சீருடையை அவரிடம் வழங்கினேன். அதில், ‘ஸ்டூவர்ட் பிராட்டுக்காக சில வாசகங்களை எழுதினேன். எனது பந்து வீச்சில் ஒரே ஓவரில் 5 சிக்சர் அடிக்கப்பட்டிருக்கிறது.

எனவே அந்த வேதனை எனக்கு புரியும். இங்கிலாந்து கிரிக்கெட்டில் சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்’ என்று அதில் எழுதியிருந்தேன்.

இப்போது உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஸ்டூவர்ட் பிராட் திகழ்கிறார். இந்திய வீரர்களின் பந்து வீச்சில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிக்கப்படக்கூடும் என்று நான் நினைக்கவில்லை என்று யுவராஜ் சிங் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker