TAMIL

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 5 போட்டியாக அதிகரிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலனை

இந்திய கிரிக்கெட் அணி வருகிற அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.

உலகை மிரட்டும் கொரோனாவின் கோரதாண்டவத்தால் இந்த போட்டி பாதிப்பின்றி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

சகஜ நிலை திரும்புவதை பொறுத்தே இந்திய தொடரின் தலைவிதி தீர்மானிக்கப்படும். ஏற்கனவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சில தொடர்கள் ரத்தானதால் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.

இதனால் தங்கள் அணி வீரர்களுக்கு ஊதியத்தை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

20 ஓவர் உலக கோப்பை மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர் ஆகியவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய வருவாயில் பேரிடியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே வருவாய் இழப்பில் சிக்கித் தவித்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இந்த போட்டிகளை எப்படியாவது? நடத்தி முந்தைய வருவாய் இழப்பை சரிக்கட்ட வேண்டும் என்பதில் தீவிர முனைப்பு காட்டுகிறது.

அத்துடன் இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடர் திட்டமிட்டபடி நடந்தால், வீரர்கள் பாதுகாப்புடன் தங்குவதற்கு வசதியாக அடிலெய்டு ஓவல் மைதானத்தின் அருகில் புதிய ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது.

இதன் கட்டுமான பணிகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சர்வதேச கிரிக்கெட் சீசன் பாதிக்கப்பட்டால் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே 2020-21-ம் ஆண்டுக்கான எங்களது கிரிக்கெட் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்த எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவும் நாங்கள் பல திட்டங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறோம்.

இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இடையே வலுவான உறவு இருக்கிறது.

வருங்காலத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 5 போட்டிகள் கொண்டதாக நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் உறுதியாக இருக்கின்றன.

இந்தியாவுக்கு எதிரான போட்டித் தொடரை முழுமையாக நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்

மேலும் ஒரு போட்டியை சேர்த்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.

இந்த போட்டி தொடரை பொறுத்தமட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்களுடன் இணைந்து, மைதானத்தில் ரசிகர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கிரிக்கெட் உலகினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

எல்லா போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்துவது என்பது உள்பட அனைத்து வகையான சாத்தியக் கூறுகளையும் எதிர்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இந்த பணிகளை எல்லாம் கவனிக்க அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு போதிய கால அவகாசம் இருக்கிறது என்று அவர் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker