TAMIL

சூதாட்டத்தில் ஈடுபடும்படி வாசிம் அக்ரம் என்னிடம் கூறியிருந்தால் கொன்று இருப்பேன் – சோயிப் அக்தர் சொல்கிறார்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் தன்னை சூதாட்டத்தில் ஈடுபடும்படி கூறியிருந்தால் அவரை கொன்று இருப்பேன் என்று சக நாட்டவரான சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். மணிக்கு 161.3 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசிய உலக சாதனையாளர்.

44 வயதான அக்தர் 46 டெஸ்டில் 178 விக்கெட்டுகளும், 163 ஒரு நாள் போட்டியில் 247 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

தனது அசுரவேக பவுலிங்கால் பல பேட்ஸ்மேன்களை கலங்கடித்த அக்தர், இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘1990-களில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமினுடைய சில ஆட்டங்களை நான் பார்த்து இருக்கிறேன். கடினமான சூழலில் எப்படி மிகவும் அபாரமாக பந்து வீசினார் என்று வியந்துள்ளேன்.

எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கிய போது அக்ரம் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அவருடன் இணைந்து நான் 7-8 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன்.

பல தருணங்களில் டாப் வரிசை விக்கெட்டுகளை வீழ்த்தும் பொறுப்பை தான் எடுத்துக் கொண்டு, பின்வரிசை விக்கெட்டுகளை எடுக்கும் வாய்ப்பை எனக்கு விட்டு விடுவார்.

குறிப்பிட்ட ஆட்டங்களில் அவர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் கூட, எனது பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பார்.

இன்னொரு விஷயத்தை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். வாசிம் அக்ரம் போட்டிகளில் ‘மேட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டத்தில் ஈடுபட என்னை வலியுறுத்தி இருந்தால், நிச்சயம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்திருப்பேன்.

ஏன் அவரை கொலை கூட செய்திருப்பேன். ஆனால் ஒரு போதும் அவர் என்னிடம் சூதாட்டம் குறித்து அணுகியதில்லை.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாது. குறைந்தது ஓராண்டு காலத்துக்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடியாது என்று கருதுகிறேன்.

கொரோனா வைரஸ் நம்மை ஒரு ஆண்டுக்கு தொந்தரவு செய்யும். இந்த சோதனையான காலக்கட்டத்தில் இருந்து நாம் வலுவாக மீண்டு வருவோம் என்று நம்புகிறேன்.

பந்து ஸ்விங் ஆக வேண்டும் என்பதற்காக பந்து வீச்சாளர்களாகிய நாங்கள் பந்தை எச்சிலால் ஒரு பக்கம் பளபளப்பாக்குவது உண்டு. அந்த பந்து எல்லா வீரர்களின் கைக்கும் செல்லும்.

இதன் மூலம் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதால் இப்போதைக்கு பந்து வீச்சாளர்கள் பந்தை எச்சிலால் தேய்க்கமாட்டார்கள்.

இவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) அறிக்கையில் படித்திருக்கிறேன்’ என்று அக்தர் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker