TAMIL

டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது எளிதல்ல – அசாருதீன் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

எதிர்காலத் திட்டம் குறித்து எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வரும் டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தன்னை தீவிரமாக தயார்படுத்தி வந்தார்.

ஆனால் கொரோனா அச்சத்தால் கடந்த மாதம் தொடங்க இருந்த 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதை பொறுத்தே அவர் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியிருந்தார்.

ஐ.பி.எல். போட்டிகளும் நடக்காததால் 38 வயதான டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாகி இருக்கிறது.

முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர் டோனி இந்திய அணிக்கு மறுபிரவேசம் செய்வதற்கான வாய்ப்பு மங்கி போய் விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் டோனி விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவருமான முகமது அசாருதீனிடம் கேட்ட போது, ‘டோனி அடுத்து என்ன செய்ய விரும்புகிறார் என்பதை என்னை விட அவர் விளக்குவதே நன்றாக இருக்கும். இது அவருடைய சொந்த விருப்பம்.

கொரோனா பரவலால் இப்போதைக்கு நாட்டின் சூழ்நிலை சரியவில்லை. அதனால் ஐ.பி.எல். போட்டிகளும் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

இத்தகைய பிரச்சினை எல்லாம் சரியாக கொஞ்சம் நாள் பிடிக்கும். அதே நேரத்தில் டோனியை பொறுத்தவரை இது அவருடைய தனிப்பட்ட முடிவு தான்.

அவர் இந்திய அணிக்கு திரும்புவது எளிதான விஷயமல்ல.

அப்படியே வாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும் தேர்வாளர்கள் நிச்சயம் அவரது திறனை பரிசோதித்து பார்ப்பார்கள். ஏனெனில் அவர் நீண்ட காலம் விளையாடாமல் இருக்கிறார்.

பயிற்சி பெறும் விதமாக போட்டிகளில் விளையாடுவது (உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். போன்றவை) உண்மையிலேயே மிகவும் முக்கியம்.

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தொடர்ந்து ஓரளவு கிரிக்கெட் விளையாட வேண்டும்.

பயிற்சி மேற்கொள்வது என்பது வேறு, களத்தில் இறங்கி போட்டிகளில் விளையாடி அதன் மூலம் பயிற்சி எடுப்பது என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker