TAMIL
பாண்டிங்கை நடுங்க வைத்த ‘ஒரு ஓவர்’ – அவரே வெளியிட்ட ருசிகர தகவல்
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை (165 ஆட்டத்தில் வெற்றி) தேடித்தந்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர்
ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங். 2012-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் அதன் பிறகு ஐ.பி.எல். அணிக்கு பயிற்சியாளர், ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசகர், டி.வி. வர்ணனையாளர் என்று எப்போதும் பிசியாகவே இருக்கிறார்.
இந்த நிலையில் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆன்ட்ரூ பிளின்டாப்பின் ஒரு ஓவரில் திக்கி திணறும் வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டது.
அந்த ஆட்டத்தை நினைவுகூர்ந்த ரிக்கிபாண்டிங், ‘எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான ஓவர் அது தான்.
பிளின்டாப்பிடம் இருந்து மணிக்கு 90 மைல் வேகத்தில் தொடுக்கப்பட்ட தரமான ரிவர்ஸ் ஸ்விங்’ என்று கூறியுள்ளார்.
பாண்டிங் குறிப்பிட்ட அந்த போட்டி 2005-ம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்டாகும்.
அதில் 2-வது இன்னிங்சில் களம் இறங்கியதும் பிளின்டாப்பின் ஓவரை பாண்டிங் சந்தித்தார்.
2 எல்.பி.டபிள்யூ. மற்றும் ஸ்லிப் கேட்ச் வாய்ப்பு என்று மூன்று முறை கண்டம் தப்பிய பாண்டிங், கடைசி பந்தை ஆப்-ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
ஆனால் அந்த பந்து நோ-பால் என்று நடுவர் அறிவிக்க, மறுபடியும் வீசப்பட்ட கடைசி பந்தில் பாண்டிங் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகிப்போனார்.
பிளின்டாப்பின் துல்லியமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் திகைத்து போன பாண்டிங் அந்த இன்னிங்சில் டக்-அவுட் ஆனார்.
இந்த டெஸ்டில் 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து ‘திரில்’ வெற்றியை ருசித்தது குறிப்பிடத்தக்கது.