TAMIL
ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் போட்டி – வக்கார் யூனிஸ் எதிர்ப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான வக்கார் யூனிஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
‘ரசிகர்கள் இன்றி மூடப்பட்ட மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகள் சீக்கிரமாக தொடங்கப்பட வேண்டும் என்ற யோசனையை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள தற்போதைய சூழலில், இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு சரியான தருணம் கிடையாது.
ஏதாவது ஒரு கட்டத்தில் இது போன்ற அம்சங்கள் குறித்து நாம் யோசிக்க வேண்டியது அவசியம் தான்.
என்னை பொறுத்தவரை கிரிக்கெட் போட்டிகள் மறுபடியும் நடப்பதற்கு 5-6 மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறேன்.
உலகம் முழுவதும் தற்போதைய மோசமான நிலைமை கட்டுக்குள் வந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்போது பூட்டப்பட்ட மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து சிந்திக்கலாம்.
நான் ஒரு வீரராக அல்லது பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியில் அங்கம் வகிக்கும் போதெல்லாம் ஐ.சி.சி. கோப்பையை வெல்வதை பார்க்க வேண்டும் என்பதில் அதீத ஆவலுடன் இருப்பேன்.
அதனால் தான் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி எனக்கும், அணிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.