TAMIL
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.51 கோடி நிதியுதவி
கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் சர்வதேச அளவில் மட்டுமின்றி, இந்தியாவிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் கைகொடுத்து வருகிறார்கள்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க விளையாட்டு பிரபலங்களும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட பலரும் நிதியுதவி அளித்துள்ளனர்.
இந்த வரிசையில் கொரோனாவின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில், இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.51 கோடியை பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி,
செயலாளர் ஜெய் ஷா ஆகியோர், வாரிய நிர்வாகிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.51 கோடியை வழங்குகிறார்கள்.
இது நாட்டின் பேரிடர் மேலாண்மை பணிகளை வலுப்படுத்தவும், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்களை காக்கும் முயற்சிக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கும்.
மேலும் கொரோனாவுக்கு எதிரான சவாலை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம், மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் இணைந்து ஆதரவாக செயல்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கொரோனாவினால் பாதித்தவர்களுக்கு உதவ ரூ.1 கோடியை வழங்க கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த தொகை பிரதமர் பேரிடர் நிவாரண நிதி மற்றும் கர்நாடக மாநில முதல்-மந்திரி நிவாரண நிதி ஆகியவற்றுக்கு தலா ரூ.50 லட்சமாக பகிர்ந்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே ரூ.10 லட்சத்தை மராட்டிய மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கும், பெங்காலை சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான மோகன் பகான் ரூ.20 லட்சத்தை மேற்கு வங்காள முதல்-மந்திரி நிவாரண நிதிக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.