TAMIL

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.

இதன் முதலாவது ஆட்டம் சிட்னியில் நேற்று நடந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடைசி நேரத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் ஸ்டேடியத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் இந்த ஆட்டம் நடந்தது.



‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னரும், கேப்டன் ஆரோன் பிஞ்சும் அருமையான தொடக்கம் தந்தனர்.

பந்தை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டிய போது ரசிகர்களின் கரவொலி, ஆரவாரம் இல்லாததை வீரர்கள் வித்தியாசமான அனுபவமாக உணர்ந்தனர்.

மேலும் சிக்சருக்கு பறந்த பந்துகளை எடுக்க ஆள் இல்லாமல் வீரர்கள் சிரமப்பட்டதையும் பார்க்க முடிந்தது.

முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் (24.1 ஓவர்) எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. வார்னர் 67 ரன்களில் (88 பந்து, 9 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

இதன் பிறகு ஆரோன் பிஞ்ச் (60 ரன், 75 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டீவன் சுமித் (14 ரன்), டார்சி ஷார்ட் (5 ரன்) அடுத்தடுத்து வெளியேற ஆஸ்திரேலியாவின் ரன்ரேட் தளர்ந்தது. மிடில் வரிசையில் லபுஸ்சேன்(56 ரன்) மட்டும் கணிசமான பங்களிப்பு அளித்தார்.

50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்தது.



அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 41 ஓவர்களில் 187 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மார்ட்டின் கப்தில் 40 ரன்னும், டாம் லாதம் 38 ரன்னும் எடுத்தனர்.

கேப்டன் வில்லியம்சன் (19 ரன்), முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் (4 ரன்) சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் தலா 3 விக்கெட்டும், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

வழக்கமாக ஆட்டம் முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் கொரோனா பயத்தால் கைகுலுக்குதை தவிர்த்து சற்று விலகிய நிலையில் பெருவிரலை உயர்த்தி காட்டிவிட்டு சென்றனர்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker