TAMIL

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் சிட்னியில் இன்று மோதல்

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது.



ஆஸ்திரேலிய அணி அண்மையில் தென்ஆப்பிரிக்க மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது.

டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், கேப்டன் பிஞ்ச் ஆகியோர் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சொந்த ஊரில் அசத்த முயற்சிப்பார்கள்.

கடைசியாக ஆடிய 5 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள ஆஸ்திரேலியா வெற்றிப்பாதைக்கு திரும்பும் ஆவலில் உள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை வென்ற கையோடு ஆஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளது.

வில்லியம்சன், கப்தில், டெய்லர், டாம் லாதம், நிகோல்ஸ் என்று நியூசிலாந்து அணி பேட்டிங்கில் வலுவாக உள்ளது.

2002-ம் ஆண்டுக்கு பிறகு சிட்னியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதில்லை.

அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் இறங்குவார்கள்.

மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபட வாய்ப்புள்ளது.



இவ்விரு அணிகளும் இதுவரை 137 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில் 91-ல் ஆஸ்திரேலியாவும், 39-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 7 ஆட்டத்தில் முடிவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், டார்சி ஷார்ட், அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.



இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker