TAMIL
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் முன்னிலை பெற பெங்கால் அணி போராட்டம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா-பெங்கால் இடையிலான இறுதி ஆட்டம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 171.5 ஓவர்களில் 425 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 65 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து இருந்தது.
சுதிப் சட்டர்ஜி 47 ரன்னுடனும், விருத்திமான் சஹா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதிப் சட்டர்ஜி 81 ரன்னிலும் (241 பந்துகளில் 7 பவுண்டரியுடன்), விருத்திமான் சஹா 64 ரன்னிலும் (184 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தனர்.
அடுத்து களம் இறங்கிய ஷபாஸ் அகமது 16 ரன்னில் அவுட் ஆனார்.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 147 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் சேர்த்துள்ளது.
அனுஸ்டப் மஜூம்தார் 134 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 58 ரன்னும், அர்னாப் நந்தி 82 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 28 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இந்த இணை 7-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் திரட்டியுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால் முன்னிலையை நோக்கி பெங்கால் அணி போராடுகிறது.
முன்னிலை பெற பெங்கால் அணிக்கு இன்னும் 72 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி கைவசம் 4 விக்கெட் உள்ளது.
கடைசி நாளான இன்றைய போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் வீரர்கள், போட்டி அதிகாரிகள், போட்டியை நடத்தும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய பொதுமேலாளர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.