TAMIL
கொரோனா பாதிப்பு ஐ.பி.எல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் இல்லை, பார்வையாளர்கள் இல்லை
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4000 பேர் பலியாகி உள்ளனர்.
ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியர்கள் – 58, வெளிநாட்டினர் – 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதற்கான விசாவில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.
அவசர தேவை மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த விசாவிற்கு மற்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற அனைத்து வகையான விசாக்களும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்கள் பிசினஸ் விசாவில் தான் வருகை தருவார்கள்.
இதனால் ஏப்ரல் 15 ஆம் தேதி வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
மேலும் கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல் தொடரை தள்ளிவைக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் வைக்கப்படுகிறது.
இதற்கிடையே வரும் 14 ஆம் தேதி ஐபிஎல் நிர்வாகக் குழுவின் கூட்டம் மும்பையில் நடக்கிறது.
ஐபிஎல் போட்டி குறித்து அனைத்து முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரம் கொண்ட நிர்வாகக் குழுதான், ஐபிஎல் போட்டியை ரத்து செய்வது, ஒத்திவைப்பது குறித்த முடிவை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பார்வையாளர்கள் இன்றி ஐ.பி.எல். போட்டிகளை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஐ.பி.எல். உள்ளிட்ட அனைத்து போட்டிகளுக்கும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம்.
என கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.