TAMIL
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 242 ரன்னில் ஆல்-அவுட்
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்திய அணியில் இரு மாற்றமாக கணுக்காலில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும் சேர்க்கப்பட்டனர்.
நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் நீக்கப்பட்டு, நீல் வாக்னெர் இடம் பிடித்தார்.
காலையில் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் 45 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், புற்களுடன் கூடிய ஆடுகளம், மேகமூட்டமான சீதோஷ்ண நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி மயங்க் அகர்வாலும், பிரித்வி ஷாவும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.
பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் நியூசிலாந்து தாக்குதலை தொடுத்தது.
ஆடுகளத்தில் பந்து ஓரளவு ஸ்விங்கும், பவுன்சும் ஆனது. அதை சாதகமாக பயன்படுத்தி அவர்கள் நெருக்கடி கொடுத்தனர்.
மயங்க் அகர்வால் (7 ரன்), டிரென்ட் பவுல்ட்டின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. அடுத்து புஜாரா வந்தார்.
பிரித்வி ஷா, வேகமாக ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினார்.
புஜாராவும், முந்தைய டெஸ்ட் போல் ஒரேயடியாக தடுப்பாட்ட பாணியில் ஈடுபடுவதை தவிர்த்து, ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டார்.
‘ஷாட்பிட்ச் மன்னன்’ நீல் வாக்னெரின் முதல் ஓவரில் ஒரு சிக்சரை பறக்கவிட்ட பிரித்வி ஷா அரைசதத்தை கடந்து அசத்தினார்.
சச்சின் தெண்டுல்கருக்கு பிறகு நியூசிலாந்து மண்ணில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த இந்தியர் என்ற பெருமை 20 வயதான பிரித்வி ஷாவுக்கு கிடைத்தது.
அணியின் ஸ்கோர் 80 ரன்களை எட்டிய போது, பிரித்வி ஷா (54 ரன், 64 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜாமிசனின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற டாம் லாதமிடம் பிடிபட்டார்.
லாதம் துள்ளி குதித்து ஒற்றைக்கையால் சூப்பராக கேட்ச் செய்தார்.
3-வது விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் விராட் கோலி இந்த முறையும் சொதப்பினார். அவர் (3 ரன், 15 பந்து) டிம் சவுதியின் பந்து வீச்சில் துல்லியமாக எல்.பி.டபிள்யூ. ஆனார்.
பிறகு அரைகுறை மனதுடன் டி.ஆர்.எஸ். கேட்டு அதுவும் விரயம் ஆனது. துணை கேப்டன் அஜிங்யா ரஹானேவும் (7 ரன்) நிலைக்கவில்லை.
அப்போது இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 113 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. இந்த சிக்கலான சூழலில் புஜாராவுடன், ஹனுமா விஹாரி கைகோர்த்தார்.
9 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த விஹாரி, புஜாராவுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா தனது 25-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
மறுமுனையில் அழுத்தமாக காலூன்றிய பிறகு விஹாரி, அதிரடி காட்டினார்.
டிரென்ட் பவுல்ட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை சாத்தினார்.
இதனால் இந்தியாவின் ரன்ரேட் 3 ரன்களுக்கு மேலாக நகர்ந்தது.
இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது இந்திய அணி 300 ரன்களை தாண்டும் என்றே நினைக்கத் தோன்றியது.
இந்த கூட்டணியை உடைக்க பீல்டிங் வியூகத்தை மாற்றிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ஸ்லிப்பில் நின்ற பீல்டர்களை அப்புறப்படுத்தி விட்டு, வெளிவட்டத்துக்குள் நிறுத்தினார்.
அதன் பிறகு தொடர்ச்சியாக ஷாட்பிட்ச் பந்துகளை வீச வைத்தார்.
அவரது இந்த திட்டத்துக்கு உடனடியாக பலன் கிட்டியது.
மட்டையை சுழட்டும் மனநிலையில் இருந்த விஹாரி (55 ரன், 70 பந்து, 10 பவுண்டரி), நீல் வாக்னெரின் ஓவரில் 2 பவுண்டரி அடித்து விட்டு ‘ஷாட்பிட்ச்’ வகையில் வீசப்பட்ட பந்தையும் ஆப்சைடில் சற்று நகர்ந்து விரட்ட முயற்சித்தார்.
ஆனால் பந்து கையுறையில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச்சாக விழுந்தது.
விஹாரி-புஜாரா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் (129 பந்து) சேகரித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
விஹாரி வெளியேறியதும் இந்திய அணி மறுபடியும் தடம் புரண்டது.
தேனீர் இடைவேளைக்கு பிறகு புஜாரா (54 ரன், 140 பந்து, 6 பவுண்டரி) தவிர்க்க வேண்டிய ஒரு பந்தில் அவசரகதியில் ஆடி விக்கெட்டை தாரை வார்த்தார்.
அதாவது ஜாமிசன் ஆப்-சைடுக்கு வெளியே எகிறி செல்லும் வகையில் வீசிய பந்தை புஜாரா ‘புல்ஷாட்’ அடிக்க முயற்சித்து அது பேட்டின் முனையில் பட்டு தலைக்கு மேலாக எழும்பியது.
அதை விக்கெட் கீப்பர் வாட்லிங் எளிதில் கேட்ச் செய்தார்.
இதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (12 ரன்), உமேஷ் யாதவ் (0) ரவீந்திர ஜடேஜா (9 ரன்) வரிசையாக நடையை கட்டினர். கடைசி கட்டத்தில் முகமது ஷமி (16 ரன்) பவுல்ட்டின் ஓவரில் இரண்டு பிரமாதமான சிக்சர் தூக்கியது சற்று ஆறுதல் அளித்தது.
முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 63 ஓவர்களில் 242 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா கடைசி 48 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது.
நியூசிலாந்து தரப்பில் உயரமான வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜாமிசன் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.
23 ஓவர்கள் பந்து வீசியும் இந்திய பவுலர்களால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை.
டாம் லாதம் 27 ரன்களுடனும் (65 பந்து, 4 பவுண்டரி), டாம் பிளன்டெல் 29 ரன்களுடனும் (73 பந்து, 4 பவுண்டரி) களத்தில் நிற்கிறார்கள். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
‘மோசமான ஷாட்டுகளால் சரிவு’ இந்திய வீரர் ஹனுமா விஹாரி
“நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சின் தாக்கம் பெரிய அளவில் இல்லை.
அவர்கள் பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்து வீசினர். பிரித்வி ஷா நல்ல தொடக்கம் தந்தார்.
புஜாரா நிலைத்து நின்று ஆடினார். ஆனால் முக்கியமான விக்கெட்டுகள் தவறான நேரத்தில் இழந்தது தான் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
ஆடுகளத்தின் தாக்கம் காரணமாக யாரும் ஆட்டம் இழக்கவில்லை.
பெரும்பாலான பேட்ஸ்மேன்கள், மோசமான ஷாட்டுகளால் வீழ்ந்தனர்.
ஆடுகளம் நன்றாகத் தான் இருந்தது”.
சவுதியிடம் 10-வது முறையாக வீழ்ந்த கோலி
இந்த இன்னிங்சில் இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி கபளகரம் செய்தார்.
ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் விக்கெட்டை டிம் சவுதி சாய்ப்பது இது 10-வது நிகழ்வாகும்.
டெஸ்டில் 3 முறையும், ஒரு நாள் போட்டியில் 6 முறையும், 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு தடவையும் வீழ்த்தி இருக்கிறார்.
கோலியின் விக்கெட்டை அதிக முறை கைப்பற்றிய பவுலர் சவுதி தான்.
சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்த விராட் கோலி, கடந்த 21 சர்வதேச இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
“பந்து காற்றில் நகர்ந்து திரும்பக்கூடிய சீதோஷ்ண நிலையில் எப்படி விளையாட வேண்டும் என்பதை நியூசிலாந்து இந்தியாவுக்கு கற்றுக்கொடுக்கிறது.
நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெற்றிப்பயணத்தை தொடங்காத வரை இந்தியா மிகச்சிறந்த அணியாக இருக்க முடியாது”