TAMIL
ஜடேஜா போல கிரிக்கெட் விளையாட ஆசை: புகழாரம் சூட்டிய அவுஸ்திரேலிய இளம் வீரர்
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா போல கிரிக்கெட் விளையாட வேண்டும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆஷ்டன் அகர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதுவரை இல்லாத அளவிற்கு 89 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தென் ஆப்பிரிக்க படுதோல்வியடைந்தது.
போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ஆஷ்டன் அகர், 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
போட்டிக்கு பின்னர் பேசிய ஆஷ்டன் அகர், “இந்தியா தொடருக்குப் பிறகு நான் ரவீந்திர ஜடேஜாவுடன் அரட்டை அடித்தேன்”. அவர் உலகில் எனக்கு மிகவும் பிடித்த வீரர், அவர் விளையாடுவதைப் போல நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன்.
“அவர் ஒரு முழுமையான வீரர். அனைத்து விதங்களிலும் அவர் அடித்து நொறுக்குகிறார்.
அவர் பேட்டிங் செய்யும் போது உண்மையிலேயே நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார்.
மேலும் அவர் அந்த அணுகுமுறையையும் களத்தில் எடுத்துக்கொள்கிறார்.
எனவே நான் அவருடன் பேசுவதன் மூலம் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், என்னைச் சுற்றி நல்ல மனிதர்களைப் பெற்றுள்ளேன். எனக்கு ஒரு அற்புதமான வருங்கால மனைவி கிடைத்துவிட்டார் – அவர் மிகவும் ஆதரவாக இருக்கிறார். அதனால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி – மற்றும் ஒரு பெரிய குடும்பம் உள்ளது. அவர்கள் தான் என்னை உண்மையிலேயே நிலைநிறுத்துகிறார்கள் என தெரிவித்தார்.