SCHOOL SPORTSSt Henry's College JAFLK
புனித ஹென்றியரசரை வீழ்த்திய புனித ஜோசப் அரையிறுதியில்
#Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் நடப்புச் சம்பியனான புனித ஜோசப் கல்லூரி, இம்முறை தொடரில் காலிறுதியில் யாழ்ப்பாணத்தின் புனித ஹென்றியரசர் கல்லூரியின் கடும் சவாலை சமாளித்து 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.
இதன்போது செனால் சன்தேஷின் ஹட்ரிக் கோல் மற்றும் தரூச ரஷ்மிக்கவின் அபார கோல்காப்பு புனித ஜோசப் கல்லூரியின் வெற்றிக்கு உதவியது.
இதன்படி, 20 வயதுக்கு உட்பட்ட Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் புனித ஜோசப் கல்லூரி அணி புனித பேதுரு கல்லூரியை எதிர்கொள்ளவுள்ளது.
பெத்தகான கால்பந்து அரங்கில் மூன்றாவது காலிறுதிப் போட்டியிலேயே புனித ஜோசப் கல்லூரி, புனித ஹென்றியரசர் கல்லூரியை எதிர்கொண்டது.
போட்டி ஆரம்பித்த விரைவிலேயே இரு அணிகளும் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. 4அவது நிமிடத்தில் புனித ஹென்றியரசர் கல்லூரிக்கு போட்டியின் முதல் கோணர் கிக் வாய்ப்பு கிட்டியபோதும் அதனை கோலாக மாற்ற முடியவில்லை.
தொடர்ந்து 3 நிமிடங்களின் பின் புனித ஜோசப் கல்லூரிக்கு பெனால்டி பெட்டிக்கு அருகில் ப்ரீ கிக் வாய்ப்பு ஒன்று கிட்டியபோதும் அந்த அணி அதனை சரியாக பயன்படுத்தவில்லை.
இந்நிலையில் போட்டியின் ஆரம்பத்தில் புனித ஜோசப் கல்லூரி வீரர்களின் கால்களிலேயே அதிக நேரம் பந்து சுழன்றது. எதிரணி கோல் எல்லையை ஆக்கிரமித்த புனித ஜோசப் வீரர்கள் அடுத்தடுத்து கோணர் கிக் வாய்ப்புகளை பெற்றனர்.
நெருக்கடிக்கு மத்தியில் 10ஆவது நிமிடத்தில் எதிரணி கோல் கம்பத்தை முற்றுகையிட்ட புனித ஜோசப் கல்லூரி வீரர் ஷலன ப்ரமன்த கோல் நோக்கி உதைந்த பந்தை புனித ஹென்ரியரசர் கோல் காப்பாளர் அஜித்ராஜன் தடுத்தார். எனினும் பட்டுவந்த பந்தை செனால் சந்தேஷ் கோலாக மாற்றி புனித ஜோசப் கல்லூரியை முன்னிலை பெறச் செய்தார்.
இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் முன்னாள் தலைவரான செனால் சந்தேஷ் இந்தத் தொடரில் பெறும் ஆறாவது கோல் இதுவாகும். இதன்மூலம் இந்தத் தொடரில் அதிக கோல் பெற்ற வீரர்கள் வரிசையில் அவர் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டார்.
தொடர்ந்து புனித ஜோசப் அணியில் ஆதிக்கம் நீடித்தது. 17 ஆவது நிமிடத்தில் செனால் சந்தேஷ் பரிமாற்றிய பந்தை கோல் கம்பத்திற்கு நெருக்கமாக இருந்து காவிந்த ரூபசீங்க உதைத்தபோதும் எதிரணி கோல்காப்பாளர் அஜித்ராஜனின் கைகளுக்கு பந்து நேராகச் சென்றது.
இந்நிலையில் 26 ஆவது நிமிடத்தில் புனித ஹென்றியரசர் வீரர்களுக்கு கோல் பெற பொன்னான வாய்ப்பு ஒன்று கிட்டியது. எதிர்ப்பு இன்றி புனித ஜோசப் கல்லூரி கோல் எல்லை வரை கடத்திச் சென்ற நிலையில் பந்து வலைக்குள் புகாமல் கோல்காப்பாளர் தரூச ரஷ்மிக்க சிறப்பாக தடுத்தார்.
முதல் பாதியின் நடுப்பகுதியாகும்போது பதில் கோல் திருப்பும் புனித ஹென்றியரசர் கல்லூரியின் உத்வேகம் அதிகரித்தது. புனித ஜோசப் கல்லூரியின் கோல் எல்லையை ஆக்கிரமித்து அந்த அணி கோல்பெற போராடியபோது கடும் இழுபறி ஏற்பட்டது. எனினும், கடைசியில் தரூச ரஷ்மிக்க பந்து வலைக்குள் செல்லாமல் தடுத்தார்.
ஒரு நிமிடத்தின் பின் (35 ஆவது நிமிடத்தில்) வைத்து புனித ஹென்றியரசர் வீரர் உதைத்த பந்து கோல்காப்பளரையும் தாண்டி வலையை நோக்கி சென்றபோது அதனை புனித ஜோசப் பின்கள வீரர் நூலிழையில் தடுத்தார்.
மறுபுறம் செனால் சந்தேஷ் புனித ஹென்றியரசர் கோல் அரணை முறியடித்து கோலை நோக்கி உதைத்தபோது அஜித் ராஜன் அதனை அபாரமாக தடுத்தார்.
போட்டியில் பரபரப்பு அதிகரித்த நிலையில் 39 ஆவது நிமிடத்தில் புனித ஹென்றியரசர் கல்லூரியால் பதில் கோல் திருப்ப முடிந்தது. அணித் தலைவர் ரெக்சனிடமிருந்து நிதானமாக பரிமாற்றப்பட்ட பந்தை பெற்ற எமில் ரூபான் அதனை நேர்த்தியாக கோலாக மாற்றினார். இதன்போது புனித ஜோசப் கோல்காப்பாளர் கோல் பகுதியை விட்டு முன்னோக்கி வந்தது எதிரணிக்கு சாதகமாக இருந்தது.
முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி 01 – 01 புனித ஹென்றியரசர் கல்லூரி
இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் புனித ஹென்றியரசர் கல்லூரி அக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 53 ஆவது நிமிடத்தில் அவ்வணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பு நூலிழையில் தவறியது. அந்த அணி வீரர் புனித ஜோசப் கோல்காப்பாளரையும் தாண்டி பந்தை உதைக்க எதிரணி பின்கள வீரர் கடைசி நேரத்தில் கோல் செல்லாமல் தட்டிவிட்டார்.
ஒரு நிமிடத்திற்குள் இது போன்று மற்றொரு வாய்ப்பையும் புனித ஹென்றியரசர் கல்லூரி தவறவிட்டது.
இந்நிலையில் 58 ஆவது நிமிடத்தில் புனித ஹென்றியரசர் வீரர் பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து மின்னல் வேகத்தில் உதைத்த பந்தை தரூச ரஷ்மிக்க அபாரமாகத் தடுத்தார்.
இரண்டாம் பாதி ஆரம்பமாகி 70 நிமிடங்கள் வரை புனித ஹென்ரியரசர் வீரர்களே போட்டியை தமது ஆதிக்கத்துடன் வைத்திருந்தனர்.
எவ்வாறாயினும் நேர்த்தியான அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய புனித ஜோசப் கல்லூரி மற்றொரு கோலை பெற்று போட்டியில் முன்னிலையை எட்டியது. செனால் சன்தேஷ் இரு பின்கள வீரர்களை முறியடித்து பந்தை பெனால்டி பெட்டிக்குள் இருக்கும் காவிந்த ரூபசிங்கவிடம் வழங்க அவர் பந்தை மீண்டும் சந்தேஷிடமே வழங்க சந்தேஷ் வலைக்குள் செலுத்தினார்.
இந்த கோலுடன் புனித ஜோசப் அணியின் கை ஓங்கியது. பந்தை அதிகம் எதிரணி கோல் பகுதிக்குள் செலுத்திய புனித ஜோசப் கல்லூரிக்காக மிலின்த பிம்சர மூன்றாவது கோலை பெற்றுக்கொடுத்தார். 78 ஆவது நிமிடத்தில் சலன பிரமன்த இடது பக்கம் இருந்த பரிமாற்றிய பந்தை பிம்சர கோலாக மாற்றினார்.
இதேவேளை போட்டி முடிவதற்கு மேலும் ஒரு நிமிடம் இருக்கும்போது மீண்டும் வேகமாக செயற்பட்ட செனால் சந்தேஷ் போட்டியில் தனது ஹட்ரிக் கோலை பெற்றார். புனித ஹென்றியரசர் கல்லூரியின் பின்களத்தில் ஏற்பட்ட பலவீனத்தை பயன்படுத்தி பந்தை வேகமாகக் கடத்திச் சென்ற அவர் சவால் இன்றி கோல் புகுத்தினார்.
இது சந்தேஷ் இந்தத் தொடரில் பெறும் 8 ஆவது கோல் என்பதோடு இந்த கோலுடன் நடப்புச் சம்பியன் புனித ஜோசப் கல்லூரி தனது வெற்றியை உறுதி செய்தது.
கோல் பெற்றவர்கள்
புனித ஜோசப் கல்லூரி – செனால் சந்தேஷ் 10’,69’,89’, மிலின்த பிம்சர 78’
புனித ஹென்றியரசர் கல்லூரி – எமில் ரூபன் 39’