TAMIL
இஷாந்த் ஷர்மாவுக்கு உடல் தகுதி சோதனை பெங்களூருவில் 15-ந் தேதி நடக்கிறது
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கடந்த மாதம் டெல்லியில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விதர்பா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கணுக்காலில் காயம் அடைந்து வெளியேறினார்.
காயத்துக்கு சிகிச்சை பெற்று வரும் இஷாந்த் ஷர்மாவின் உடல் தகுதி குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
உடல் தகுதியை நிரூபிப்பதை பொறுத்து அவருக்கு அணியில் இடம் இறுதி செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இஷாந்த் ஷர்மாவுக்கு வருகிற 15-ந் தேதி உடல் தகுதி சோதனை நடத்தப்படுகிறது.
இதற்காக அவர் பெங்களூருவில் சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகிறார்.
உடல் தகுதி சோதனையில் இஷாந்த் ஷர்மா தேர்ச்சி பெற்றால் அவர் டெஸ்ட் தொடரில் விளையாட நியூசிலாந்துக்கு புறப்பட்டு செல்வார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.
கடந்த அக்டோபர் மாதம் முதுகு வலிக்காக ஆபரேஷன் செய்து தேறி வரும் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் தேசிய கிரிக்கெட் அகாடமி டாக்டர்கள் மேற்பார்வையில் பெங்களூருவில் சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.