TAMIL
30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ‘ஒயிட் வாஷ்’..! பழிக்கு பழி தீர்த்தது நியூசிலாந்து.. கோஹ்லிக்கு தலைகுனிவு
இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி-20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட அட்டவணையிட்டிருந்தது.
முன்னதாக நடந்த 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்தை 5-0 என ஒயிட் வாஷ் செய்து அசத்தியது இந்தியா.
இதைதொடர்ந்து நடந்த ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டியையும் வென்று, நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி தோராங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து பழிதீர்க்கும் முனைப்போடு நியூசிலாந்து களமிறங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல் சதத்தால் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ஓட்டங்கள் குவித்தது.
நியூசிலாந்து தரப்பில் பென்னட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 297 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 47வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது.
நியூசிலாந்து தரப்பில் நிக்கோல்ஸ் 80 ஓட்டங்கள் குவித்தார்.
இந்தியா தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் டி-20 தொடரில் ஒயிட் வாஷ் செய்த இந்தியாவை ஒரு நாள் தொடரில் ஒயிட் வாஷ் செய்து நியூசிலாந்து பழிதீர்த்துள்ளது.
1989 மார்ச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 5-0 என்ற வெற்றி கணக்கில் இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது.
அதன் பின் 2006ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில் 4-0 என இந்தியா தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 21ம் திகதி வெலிங்கடன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.