COVID - 19LATEST UPDATESNEWSTAMIL
3 மாவட்டங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை…!
ஊரடங்கு அமுலாகியுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக அரசாங்கத்தினால் தற்போது பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, ச.தொ.ச உள்ளிட்ட அனைத்து பல்பொருள் அங்காடிகள் ஊடாக பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சதோசவிற்கு மேலதிகமாக நாட்டில் உள்ள பல்வேறு அங்காடிகள் வலையமைப்பின் ஊடாக பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட நடவடிக்கைகளும் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கொவிட் 19 பரவல் ஏற்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட இணைய முறைமை ஊடாக பொருட்களை முற்பதிவு செய்து அவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் வட்ஸ்அப் மற்றும் தொலைபேசி ஊடாக பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக பல்பொருள் அங்காடி வலையமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளைய தினம் புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்க தலைவர் எஸ் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாளை அதிகாலை 5 மணிமுதல் மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவுள்ளதுடன் ஊரடங்கு சட்ட அனுமதிபத்திரத்தை பெற்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வருமாறு அவர் வர்த்தகர்களிடம் கோரியுள்ளார்.
இதேவேளை. கொழும்பு உள்ளி;ட்ட ஊரடங்கு சட்;டம் அமுலாகியுள்ள ஏனைய பிரதேச மக்களுக்காகவும் வெதுப்பக உற்பத்திகளை விற்பனை செய்வதற்காக விசேட வேலைத்திட்டத்தை மேற்கொள்ள அனுமதி தருமாறு அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
ஊரடங்கு சட்ட அமுலாகும் பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் ஊடாக வெதுப்பக உற்பத்தி பொருட்களை விநியோகிப்பதற்கு வாய்ப்பை பெற்றுத்தருமாறு அந்த சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் மேல் மாகாணத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
குறித்த கலந்துரையாடல் இன்று முற்பகல் 10.30 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமாகியுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள காலப்பகுதியில் பொது மக்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 25 மாவட்டங்களின் செயலாளர்களும் இன்று பிற்பகல் 4 மணிக்கு அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் குறித்த மாவட்டங்களில் தற்போது ஏற்பட்டுள்ள நிலமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.