TAMIL
2023-ம் ஆண்டு உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி 30-ந் தேதி தொடக்கம்: ஐ.சி.சி. அறிவிப்பு
13-வது ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் சூப்பர் லீக் என்ற பெயரில் கணக்கிடப்படும் தொடரில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும்.
இந்த போட்டி தொடரில் முழு உறுப்பினர்களான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் 2015-17ம் ஆண்டில் நடந்த உலக சூப்பர் லீக் போட்டியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து ஆகிய 13 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் தலா 4 ஒருநாள் போட்டி தொடரில் விளையாட வேண்டும். ஒவ்வொரு தொடரிலும் 3 ஒருநாள் ஆட்டங்கள் இடம் பெறும்.
இதன்படி ஒரு அணி மொத்தம் 24 ஒருநாள் போட்டியில் விளையாடும்.
ஒவ்வொரு வெற்றிக்கும் 10 புள்ளியும், கைவிடப்பட்ட ஆட்டம், முடிவு இல்லை மற்றும் ‘டை‘யில் முடிந்த ஆட்டத்துக்கு தலா 5 புள்ளியும் வழங்கப்படும்.
இந்த போட்டி தொடரின் முடிவில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் போட்டியை நடத்தும் இந்தியா ஆகியவை நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.
சூப்பர் லீக் போட்டியில் தகுதி இலக்கை எட்டாத 5 அணிகள், 5 அசோசியேட் நாட்டு அணிகளுடன் இணைந்து உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் மோத வேண்டும்.
இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டியின் எஞ்சிய 2 தகுதிக்கான இடங்களை தனதாக்கும்.
2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் ஒருநாள் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த போட்டியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் உலக கோப்பை தகுதிக்கான ஒருநாள் சூப்பர் லீக் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கும் என்று (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது.
இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் சவுதம்டனில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இந்த தொடரில் இருந்து சூப்பர் லீக் போட்டி ஆரம்பமாகிறது என்றும் எஞ்சிய போட்டிக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
இந்த ஒருநாள் போட்டி தொடரில் இருந்து நோ-பாலை 3-வது நடுவர் கண்காணிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் ஒருநாள் ஆட்டங்களின் முடிவுகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்பதால் வரும் ஒருநாள் போட்டி தொடர்களில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் போட்டி தொடரில் அயர்லாந்துக்கு எதிராக விளையாட போகும் இங்கிலாந்து அணியின்
கேப்டன் இயான் மோர்கன் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த முறை உள்ளூரில் நடந்த உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கினோம்.
அடுத்த உலக கோப்பை போட்டிக்கான பயணத்தை சொந்த மண்ணில் தொடங்குவது அருமையானதாகும்.
ஒயிட்பால் (ஒருநாள் மற்றும் 20 ஓவர்) கிரிக்கெட் போட்டி தொடங்குவதை கண்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நிச்சயம் நம்புகிறேன்.
நாங்கள் சவாலை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். அயர்லாந்து அணி தனக்குரிய நாளில் எந்த அணியையும் வீழ்த்தக்கூடியதாகும்’ என்றார்.
அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி கூறுகையில், ‘உலக கோப்பையை வென்ற ஒரு ஆண்டு காலத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்வது என்பது பெரிய சவாலாகும்.
இந்த போட்டிக்கு நன்றாகவே தயாராகி இருக்கிறோம்.
சவாலான இந்த தருணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நிலையாக திரும்பும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.