CRICKETLATEST UPDATESNEWSTAMIL

2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்

தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதில் அவர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் யார்க்கர் பந்துவீச்சில் அசத்தியதால் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2017-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டி.நடராஜனை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. அப்போது பஞ்சாப் அணிக்கு ஆலோசகராக வீரேந்திர ஷேவாக் இருந்தார்.

டி.நடராஜனை ஏலம் எடுத்தது குறித்து ஷேவாக் தனது நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐ.பி.எல். போட்டியில் நடராஜனை பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். உள்ளூர் போட்டிகளில் விளையாடாத ஒரு வீரரை தேர்வு செய்தது குறித்து ஒவ்வொருவரும் கேள்வி கேட்டனர்.

இவ்வளவு பெரிய தொகைக்கு நடராஜனை ஏன் ஏலம் எடுத்தீர்கள் என்று கேட்டனர். நான் பணத்தை பற்றி கவலைப்படவில்லை. அவரிடம் திறமை இருக்கிறது. எங்கள் அணியில் சில தமிழக வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னிடம் நடராஜன் நல்ல பந்து வீச்சாளர், சரியான யார்க்கர்களை வீசுவார் என்று தெரிவித்தனர். நான் அவரது பந்துவீச்சு வீடியோக்களை பார்த்தேன். பின்னர் ஏலத்தின் போது அவரை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

ஏனென்றால் அப்போது எங்களிடம் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசும் வீரர் இல்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த ஆண்டு நடராஜன் காயம் அடைந்ததால் பல போட்டிகளில் விளையாட முடியவில்லை.

ஆனால் விளையாடிய ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். மற்ற ஆட்டங்களில் தோல்வி அடைந்தோம். அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நடராஜனுக்கு 20 ஓவர் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவருக்கு ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

என்ன நடந்தாலும் நல்லது. நடராஜனுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் இங்கிருந்து தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker