CRICKETLATEST UPDATESNEWSTAMIL

2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் மனஅழுத்தத்துடன் போராடினேன் – மனம் திறந்த விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த தொடர் விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத அளவுக்கு மோசமானதாக இருந்தது.

இங்கிலாந்து வேகப்பந்து வீரர்கள் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரது சுவிங் பந்தில் அவர் பலமுறை விக்கெட் கீப்பரிடமும், சிலிப் பகுதியிலும் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த தொடரில் விராட் கோலியின் ஸ்கோர் 1, 8, 25, 0, 39, 28, 0, 6, 20 ஆகிய ரன்களாக இருந்தது. அவரது சராசரி 13.5 ஆக இருந்தது. இந்த டெஸ்ட் தொடரில் பாடங்களை கற்று தனது தவறுகளை திருத்திக் கொண்டு விராட் கோலி அடுத்து நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 692 ரன்களை விளாசினார்.

இங்கிலாந்து பயணத்தில் தான் அனுபவித்த வேதனைகள் குறித்து இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி ‘நாட் ஜஸ்ட் கிரிக்கெட்’ என்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் நிக்கோலசுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த உரையாடலின்போது 2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் மோசமாக பேட்டிங் செய்தபோது எப்படி உணர்ந்தீர்கள். மன அழுத்தம் இருந்ததா? என்று நிக்கோலஸ் கேட்டார். இதற்கு பதிலளித்து விராட் கோலி கூறியதாவது:-

மோசமான ஆட்டத்தால் எனக்கு மன அழுத்தம் இருந்தது. அதனுடன் கடுமையாக போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மிகுந்த அதிகமான வலியால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

மோசமான ஆட்டத்தில் இருந்து எப்போது மீண்டு வருவேன் என்று புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் எதையும் செய்ய முடியாதவனாக நான் இருந்தேன். அப்போது உலகிலேயே நான் தனி மனிதனாக இருந்ததாக உணர்ந்தேன்.

நான் மிகுந்த மன அழுத்தத்திலும் நம்பிக்கை அற்றவனாக இருந்தபோது பலரும் ஊக்கமளித்தனர். யாரும் என்னுடன் பேசவில்லை. ஆதரவு அளிக்கவில்லை என்று சொல்ல மாட்டேன்.

1990களில் இருந்த இந்திய அணிதான் என் கிரிக்கெட் சார்ந்த கற்பனையை மேலும் விசாலப்படுத்தியது. நான் பார்த்த வரையில் மிகவும் வித்தியாசமாக இருந்தது.

18 வயதில் என் தந்தையை இழந்தேன். நான் சிறந்த கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என்று அவர் விரும்பினார். என்னுடைய தந்தையின் கனவும், என்னுடைய கனவும் ஒருநாள் நனவாகும்.

தேசத்துக்காக உயர்ந்த இடத்தில் இருந்து விளையாடுவேன் என்று நம்பினேன்.

இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார். 

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker