TAMIL
2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை என் மீது டோனி நம்பிக்கை வைத்து இருந்தார்; யுவராஜ்சிங் பேட்டி
2011-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன் தொடர்நாயகன் விருதையும் பெற்ற அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங், அந்த போட்டி முடிந்ததும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 19 மாத இடைவெளிக்கு பிறகு மறுபிரவேசம் செய்தாலும் அவரால் முன்பு போல் ஜொலிக்க முடியவில்லை.
இதனால் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் கடந்த ஆண்டு (2019) ஜூன் மாதத்தில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். 38 வயதான யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
இந்திய அணிக்கு நான் மீண்டும் திரும்பிய போது விராட்கோலி எனக்கு ஆதரவு அளித்தார்.
அவருடைய ஆதரவு இல்லாமல் இருந்து இருந்தால் என்னால் இந்திய அணியில் மறுபடியும் இடம் பிடித்து இருக்க முடியாது.
2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி குறித்து உண்மையான நிலைமையை டோனி எனக்கு உணர்த்தினார்.
அந்த உலக போட்டிக்கு தேர்வாளர்கள் எனது பெயரை பரிசீலிக்கவில்லை என்பதை எனக்கு புரிய வைத்தார். அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்தார்.
2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை டோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்து இருந்தார். ‘நீங்கள் அணியின் முக்கியமான வீரர்’ என்று அடிக்கடி சொல்வார்.
ஆனால் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டு வந்த பிறகு அணியில் நிறைய விஷயங்கள் மாறியிருந்தன. ஒரு கேப்டனாக சில நேரங்களில் உங்களால் எல்லாவற்றையும் நியாயப்படுத்த முடியாது. இறுதியில் ஒரு அணியாக நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பார்க்க வேண்டும். ஒவ்வொரு கேப்டனும் ஒரு சில வீரர்களுக்கு ஆதரவு அளிக்கலாம். ஆதரவு கொடுக்காமலும் இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.
சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தடுமாறிய போது டோனி அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். இதே போல் லோகேஷ் ராகுலுக்கு விராட் கோலி ஆதரவாக இருந்து இருக்கிறார். புற்றுநோயில் இருந்து மீண்டு களம் திரும்பிய போது என் மீது நம்பிக்கை வைக்காததற்காக நான் யாரையும் குறை சொல்லமாட்டேன். ஏனெனில் எனது ஆட்டத்தின் மீது முன்பு இருந்த நம்பிக்கை வருவதற்கு எனக்கே சில காலம் பிடித்தது.
பஞ்சாப் அணிக்கு ஆலோசகராக பணியாற்ற இருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். பஞ்சாப் அணி வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.