TAMIL
2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டமா?இலங்கை முன்னாள் மந்திரி ஆதாரங்களை ஒப்படைத்தார்
2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் மும்பையில் நடந்த இறுதி ஆட்டத்தில் டோனி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 28 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியது. ‘இந்த உலக கோப்பையை இலங்கை விற்று விட்டது.
இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச்பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்துள்ளது. வீரர்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும் சில குழுவினர் பிக்சிங்கில் ஈடுபட்டனர்.
இல்லாவிட்டால் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கும்’ என்று இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை மந்திரி மகிந்தானந்தா அலுத்காமகே சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டு குறித்து இலங்கை அரசின் உத்தரவின் பேரில் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கொண்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு அதிகாரிகளிடம் நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்த மகிந்தானந்தா அலுத்காமகே தன்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
அவர் கூறுகையில், ‘விளையாட்டுத்துறை மந்திரி என்ற அடிப்படையில் 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தை நானும் நேரில் சென்று பார்த்தேன்.
அப்போது ஆட்டத்தன்மை குறித்து எனக்கு சில சந்தேகங்கள் எழுந்தது.
நாட்டுக்கு திரும்பியதும் சில முன்னாள் வீரர்கள் என்னை சந்தித்து இறுதிப்போட்டியில் ‘மேட்ச்பிக்சிங்’ நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு நான் கடிதம் எழுதினேன். அதன் நகலையும், மேலும் சில ஆவணங்களையும் விசாரணை குழுவிடம் ஒப்படைத்துள்ளேன். அதில் 24 சந்தேகத்திற்குரிய காரணங்களை வெளிப்படுத்தி உள்ளேன். எனது சந்தேகம் குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்.’ என்றார்.