TAMIL
20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
நேற்று நடந்த 3-வது லீக்கில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 103 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
மந்தனா (35 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (28 ரன்), ராதா யாதவ் (11 ரன்) தவிர யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் எலிஸ் பெர்ரி 4 விக்கெட்டுகளும், விலாமின்க் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரு ரவுண்ட் முடிவடைந்துள்ள நிலையில் மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளன.
மெல்போர்னில் வருகிற 7-ந்தேதி நடக்கும் 4-வது லீக்கில் இந்திய அணி, இங்கிலாந்தை மீண்டும் எதிர்கொள்கிறது.