TAMIL
20 ஓவர் போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணி கவுகாத்தி வந்தது
மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி நகரில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
இதையொட்டி இலங்கை வீரர்கள் நேற்று கவுகாத்திக்கு வந்தடைந்தனர். விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்திய வீரர்கள் பல குழுவாக இன்று கவுகாத்தி வந்து சேருகிறார்கள்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் போராட்டம் நடந்ததால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதன் எதிரொலியாக ரஞ்சி கிரிக்கெட், ஐ.எஸ்.எல் கால்பந்து, 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்ளூர் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் இப்போது அமைதி திரும்பி விட்டது.
அசாம் கிரிக்கெட் சங்க செயலாளர் தேவஜித் சாய்கியா கூறுகையில், ‘அசாமில் இப்போது நிலைமை சீரடைந்துவிட்டது. சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி விட்டனர்.
வருகிற 10-ந்தேதியில் இருந்து நாங்கள் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை நடத்த உள்ளோம். இதில் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருக்கிறார்கள்.
நாட்டில் வேறு எந்த இடத்தையும் விட இப்போது பாதுகாப்பான பகுதியாக இது இருக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு கவனித்து வருகிறது. இந்த மைதானம் 39,500 இருக்கை வசதி கொண்டது.
இதில் ஏறக்குறைய 27 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று விட்டன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து விட்டதால், இனி கடைசி நேரத்தில் டிக்கெட் வாங்க மக்கள் அலைமோதுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
2-வது 20 ஓவர் போட்டி 7-ந்தேதி இந்தூரிலும், கடைசி ஆட்டம் 10-ந்தேதி புனேயிலும் நடக்கிறது.