TAMIL
20 ஓவர் கிரிக்கெட்: திருவள்ளூர் அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் எஸ்.எஸ்.ராஜன் கோப்பைக்கான மாவட்டங்கள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் மற்றும் நெல்லையில் நடந்தது.
இதில் திண்டுக்கலில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் திருவள்ளூர்-விழுப்புரம் அணிகள் மோதின.
முதலில் ஆடிய திருவள்ளூர் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது.
அந்த அணி வீரர்கள் ராம் அரவிந்த் 106 ரன்னும் (53 பந்து, 7 பவுண்டரி, 9 சிக்சர்), ஷிஜித் சந்திரன் 87 ரன்னும் (49 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினர்.
பின்னர் 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய விழுப்புரம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களே எடுத்தது.
இதனால் திருவள்ளூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு ஆட்டத்தில் கோவை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.
நெல்லையில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் காஞ்சீபுரம் அணி, வேலூரை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த வேலூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய காஞ்சீபுரம் அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
இன்னொரு ஆட்டத்தில் மதுரை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் ஈரோடு அணியை சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.