TAMIL
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுமா? – ஐ.சி.சி. இன்று ஆலோசனை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போர்டு நிர்வாகிகள் டெலி கான்பரன்ஸ் மூலம் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்கள். இதில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் அதன் தலைவர் சவுரவ் கங்குலி பங்கேற்கிறார்.
16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆனால் கொரோனா பீதியால் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டவர் நுழைய செப்டம்பர் மாதம் வரை தடை நீடிக்கிறது.
மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துவது, 16 அணிகளும் ஒரே இடத்தில் ஒன்றிணைவது என்று நிறைய நடைமுறை சிக்கல் இருப்பதால் இந்த போட்டி நடப்பது சந்தேகம் தான்.
இது குறித்து இன்றைய ஐ.சி.சி. கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. “தற்போதைய நிலைமையில் இந்த உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடப்பதற்கு வாய்ப்பு மிக குறைவு தான்.
அனேகமாக 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதற்கே வாய்ப்பு அதிகம்.
இது குறித்து கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்படும். ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படுமா என்பது தான் இங்கு எழும் ஒரே கேள்வி’ என்று ஐ.சி.சி. உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
உலக கோப்பை போட்டி ஒத்திவைக்கப்படும் பட்சத்தில் அந்த சமயத்தில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவதில் உள்ள பிரச்சினை குறித்து ஐ.சி.சி. ஆலோசிக்க இருக்கிறது. உரிய நேரத்தில் அது குறித்து இறுதி முடிவு எடுக்கும்.
அனேகமாக 4 முதல் 5 வாரங்கள் ஆகலாம்’ என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிக்கு மத்திய அரசிடம் இருந்து வரிவிலக்கு பெற்றுத்தர வேண்டும் என்று ஐ.சி.சி.கெடு விதித்து இருந்தது.
அதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஜூன் 30-ந்தேதி கால அவகாசம் தர வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் அதை ஐ.சி.சி. ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒப்பந்தப்படி வரிவிலக்கு தராவிட்டால் 2021-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு பறிக்கப்படும் என்று ஐ.சி.சி. அதிரடியாக எச்சரித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இ-மெயில் அனுப்பியுள்ளது.
இது குறித்தும் இன்றைய ஆட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஐ.சி.சி. தலைவர் ஷசாங் மனோகரின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. புதிய தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
தேர்தல் தேதி அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல் என்று அதற்கான நடைமுறைகளை தொடங்குவது குறித்தும் அறிவிக்கப்பட உள்ளது.