TAMIL
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் இடம் பெறுவாரா? பயிற்சியாளர் பவுச்சர் விளக்கம்
கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் கடந்த வருடம் நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற முயற்சித்தார்.
ஆனால் தேர்வாளர்கள் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்சுக்கு இடம் அளிக்கப்படுமா? என்று தென் ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சரிடம் கேட்ட போது, ‘டிவில்ல்லியர்ஸ் குறித்து மீடியாக்களும், பொதுமக்களும் தான் விவாதித்து வருகிறார்கள். அவர் என்னுடன் விவாதிக்கவில்லை.
அவருடன் நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அவர் விஷயத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படும்.
நான் பயிற்சியாளராக பதவி ஏற்ற நாளில் இருந்து உலக கோப்பை போட்டிக்கு நாங்கள் சிறந்த வீரர்களுடன் செல்வோம் என்று தான் சொல்லி வருகிறேன்.
உலக கோப்பை போட்டி சமயத்தில் டிவில்லியர்ஸ் நல்ல உடல் தகுதியுடன், அணி தேர்வுக்கு சிறப்பான நிலையில் தயாராக இருந்தால் அவர் அணியில் இடம் பெறுவார்.
டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்புவதில் எந்த ஈகோ பிரச்சினையும் இருக்காது.
உலக கோப்பை போட்டிக்கு சிறந்த அணியை அனுப்பி போட்டியில் வெற்றி பெற முயற்சிப்பது தான் எங்கள் நோக்கமாகும்’ என்று தெரிவித்தார்.