TAMIL

2-வது டெஸ்ட் கிரிக்கெட்: கம்மின்ஸ் பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 467 ரன்கள் குவித்தது.

அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங்கில் இறங்கிய நியூசிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளிக்க
முடியாமல் திண்டாடினர்.



குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மிரட்டினார். அவரது பந்து வீச்சில் ராஸ் டெய்லர் (4 ரன்) ஸ்லிப்பில் நின்ற ஜோ பர்ன்சிடம் பிடிபட்டார்.

ஹென்றி நிகோல்ஸ் (0) அவரது பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இதே போல் மிட்செல் ஸ்டார்க், பேட்டின்சன் ஆகியோரும் தாக்குதல் தொடுக்க, நியூசிலாந்து முழுமையாக சரண் அடைந்தது.

டாம் லாதம் (50 ரன், 144 பந்து) தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் நடையை கட்டினர்.

முடிவில் நியூசிலாந்து அணி 54.5 ஓவர்களில் 148 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1974-ம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்தின் மோசமான ஸ்கோர் இதுவாகும்.



கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும், பேட்டின்சன் 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அடுத்து நியூசிலாந்துக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காத ஆஸ்திரேலியா 319 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது.

டேவிட் வார்னர் (38 ரன்), மார்னஸ் லபுஸ்சேன் (19 ரன்), ஜோ பர்ன்ஸ் (35 ரன்), ஸ்டீவன் சுமித் (7 ரன்) ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியேற்றப்பட்டனர்.

இதில் லபுஸ்சேன் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன்-அவுட் முறையில் வீழ்த்தப்பட்டார்.

ஸ்டீவன் சுமித், நீல் வாக்னெர் ஷாட்பிட்சாக லெக்சைடில் வீசிய பந்தை தட்டிவிட்ட போது கேட்ச் ஆகிப்போனார்.

வாக்னெரின் பந்து வீச்சில் சுமித் தொடர்ந்து 4-வது முறையாக விக்கெட்டை தாரை வார்த்து இருக்கிறார்.



3-வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 45 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து மொத்தம் 456 ரன்கள் முன்னிலையுடன் வலுவான
நிலையை எட்டியிருக்கிறது.

மேத்யூ வேட் (15 ரன்), டிராவிஸ் ஹெட் (12 ரன்) களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து தரப்பில் நீல் வாக்னெர் 2 விக்கெட்டுகளும், சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இன்றைய 4-வது நாளில் ஆஸ்திரேலிய அணி சிறிது நேரம் பேட் செய்து விட்டு இமாலய ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

நியூசிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் (8 ரன்) நேற்று பேட்டிங் செய்த போது, மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரு
பந்து கையுறையை பலமாக தாக்கியது.

‘எக்ஸ்ரே’ சோதனையில் வலது கை விரல் இணைப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.



இதனால் சிட்னியில் வருகிற 3-ந்தேதி தொடங்கும் கடைசி டெஸ்டில் இருந்து அவர் விலகியுள்ளார்.

அவரது காயம் குணமடைய குறைந்தது 4 வாரம் ஆகும் என்று நியூசிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த டெஸ்ட் முடிந்ததும் அவர் தாயகம் திரும்புகிறார்.

கம்மின்ஸ், வாக்னெர் சாதனை

இந்த டெஸ்டில் 5 விக்கெட்டுகளை அள்ளிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 26 வயதான பேட் கம்மின்ஸ் உலகின் ‘நம்பர் ஒன்’ பவுலராக வலம் வருகிறார்.

இதுவரை 29 டெஸ்டுகளில் ஆடி 139 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

ஆனால் அவர் எல்.பி.டபிள்யூ. வகையில் விக்கெட் வீழ்த்துவது அரிதாகவே உள்ளது.

2018-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு இந்த டெஸ்டில் தான் அவர் எல்.பி.டபிள்யூ. செய்து இருக்கிறார்.



மொத்தத்தில் அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 6 விக்கெட் மட்டுமே எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகள் (12 டெஸ்டில் 59 விக்கெட்) எடுத்தோர் பட்டியலில் கம்மின்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 33 வயதான நீல் வாக்னெர், ஸ்டீவன் சுமித்தின் விக்கெட்டை கபளகரம் செய்த போது அது அவரது
200-வது விக்கெட்டாக அமைந்தது.

இந்த மைல்கல்லை துரிதமாக எட்டிய 2-வது நியூசிலாந்து பவுலர் (46 டெஸ்டில்) வாக்னெர் ஆவார்.

நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ 44 டெஸ்டில் இந்த இலக்கை அடைந்ததே சாதனையாக உள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker