TAMIL

2-வது 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத்தில் நேற்று நடந்தது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணியில் கேப்டன் குயின்டான் டி காக் ரன்மழை பொழிந்தார்.

ஆஸ்திரேலிய பந்து வீச்சை துவம்சம் செய்த அவர் 47 பந்துகளில் 70 ரன்கள் (5 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்தார். அவர் களத்தில் நின்றது வரை அந்த அணியின் ஸ்கோர் 180 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது.


அவர் வெளியேறியதும் ரன்வேகம் குறைந்தது. மிடில் வரிசையில் வான்டெர் துஸ்சென் (37 ரன்) மட்டும் கணிசமான பங்களிப்பை அளித்தார்.

முன்னாள் கேப்டன் பிளிஸ்சிஸ் 15 ரன்னில் கேட்ச் ஆனார்.

20 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 159 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் இறங்கினர்.

பிஞ்ச் 14 ரன்னில் கிளன் போல்டு ஆனார். இதன் பின்னர் வார்னருடன், ஸ்டீவன் சுமித் ஜோடி சேர்ந்தார்.

இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி பயணிப்பது போலவே தெரிந்தது.

ஸ்கோர் 98 ரன்களை (12.3 ஓவர்) எட்டிய போது ஸ்டீவன் சுமித் 29 ரன்களில் (26 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

இதன பின்னர் ஆஸ்திரேலிய அணி நெருக்கடிக்குள்ளானது.


கைவசம் விக்கெட் இருந்தும் அதுவும் ‘அதிரடி மன்னன்’ வார்னர் களத்தில் நின்றும், தென்ஆப்பிரிக்க பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர்.

அலெக்ஸ் கேரி 14 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 6 ரன்னிலும், மேத்யூ வேட் ஒரு ரன்னிலும் வெளியேறினர்.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.

இறுதி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ஜே, ஆஷ்டன் அகரின் (1 ரன்) விக்கெட்டை வீழ்த்தியதோடு 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியால் 6 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலியா சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

20 ஓவர் கிரிக்கெட்டில் இலக்கை நோக்கி ஆடும் போது டேவிட் வார்னர் (67 ரன், 56 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் நின்றும், ஆஸ்திரேலிய அணி தோற்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

தென்ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளும், ரபடா, நார்ஜே, பிரிடோரியஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


வெற்றியையடுத்து 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.

கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி வருகிற 26-ந்தேதி கேப்டவுனில் நடக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker