TAMIL
2-வது டெஸ்டிலும் இந்திய வீரர்கள் தாக்குப்பிடிப்பது கடினம் – நியூசிலாந்து பவுலர் வாக்னெர் பேட்டி
வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது.
இந்த ஆடுகளமும் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கக்கூடியது.
குழந்தை பிறந்ததால் முதலாவது டெஸ்டில் ஆடாத நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் அணிக்கு திரும்பியுள்ளார். ஷாட்பிட்ச் பந்துகளை துல்லியமாக வீசுவதில் வல்லவரான வாக்னெர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ‘சோதனை’ கொடுக்க காத்திருக்கிறார்.
33 வயதான வாக்னெர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கிறைஸ்ட்சர்ச், வேகத்துடன் கூடிய இன்னும் அதிகமாக பவுன்ஸ் ஆகும் ஆடுகளம்.
எனவே நிச்சயம் இங்கு இந்திய வீரர்கள் தாக்குப்பிடித்து ஆடுவது கடினமாக இருக்கும்.
இந்தியாவில் விளையாடும் போது அங்குள்ள ஆடுகளங்களில் அந்த அளவுக்கு பவுன்சும், வேகமும் இருக்காது.
எனவே இங்குள்ள சூழலுக்கு ஏற்ப அவர்கள் தங்களை மாற்றிக்கொள்வது எளிதல்ல’ என்றார்.
மேலும் வாக்னெர் கூறும் போது, ‘ஒவ்வொரு அணிக்கு எதிராக விளையாடும் போதும் அந்த அணியில் உள்ள சிறந்த வீரர்களை குறி வைத்து தாக்குதல் தொடுத்து வீழ்த்த முயற்சிப்பேன்.
இதே போல் இந்த டெஸ்டில் எனது ‘கவனிப்பு’ இந்திய கேப்டன் விராட் கோலி மீது இருக்கும்.
அவரை ரன் எடுக்க விடாத வகையில் இரண்டு முனையிலும் கடும் நெருக்கடி கொடுப்போம்’ என்றார்.