CRICKETLATEST UPDATESNEWS
2-வது டி20: இந்தியாவுக்கு 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணியில் ஆரோன் பிஞ்ச், மிட்செல் ஸ்டார்க் விளையாடவில்லை. மேத்யூ வடே கேப்டனாக செயல்பட்டார்.
மேத்யூ வடே, ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மேத் வடே தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மேலும், பந்துகள் அனைத்தையும் அவரே சந்தித்து வந்தார். ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்கள் வந்து கொண்டிருந்தது. 5-வது ஓவரை டி நடராஜன் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஆர்கி ஷார்ட் 9 ரன்கள் (9 பந்தில்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஸ்டீவ் ஸ்மித் களம் இறங்கினார். ஆஸ்திரேலியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக விளையாடி மேத்யூ வடே 25 பந்தில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
8-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை மேத்யூ வடே எதிர்கொண்டார். பந்து பேட்டில் பட்டு கோலியிடம் சென்றது. விராட் கோலி எளிதான கேட்சை கோட்டைவிட்டார். ஆனால் பந்தை எடுத்து விக்கெட் கீப்பரிடம் வீசி ரன்அவுட் செய்தார். இதனால் வடே 32 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஷர்துல் தாகூர் பந்தில் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் 38 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கிடையில் ஆஸ்திரேலியா 11 ஓவரில் 100 ரன்களும், 15.5 ஓவரி் 150 ரன்களையும் கடந்தது. 18-வது ஓவரில் சாஹல் ஸ்மித்தையும், 19-வது ஓவரில் நடராஜன் ஹென்ரிக்ஸையும் வெளியேற்றினர். நடராஜன் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விகக்கெட் வீழ்த்தினார்.
கடைசி ஓவரில் தீபக் சாஹர் 17 ரன்கள் விட்டுக்கொடுத்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியாவுக்கு 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
தீபக் சாஹர் 48 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 35 ரன்களும், ஷர்துல் தாகூர் 39 ரன்களும், சாஹல் 51 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.