TAMIL
2-வது ஒருநாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை எல்லா துறையிலும் வீழ்த்தி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 255 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 258 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது.
இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தார்.
இதனையடுத்து முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-ஷிகர் தவான் களமிறங்கினார்கள்.
ரோகித் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களில் வெளியேறினார்.
இதன் பின்பு தவானுடன் கோலி ஜோடி சேர்ந்தார் .இந்த ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடியது.
இந்த சமயத்தில் சதம் அடிக்க வேண்டிய நிலையில் ஷிகர் தவான் 96 ரன்களில் வெளியேறினார்.
மறுபுறம் கோலி தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.
ஆனால் கோலியும் 78 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர் 7, மனிஷ் பாண்டே 2 ரன்களிலும் வெளியேறினார்கள்.
ஆனால் லோகேஷ் ராகுல் மட்டும் இறுதியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாடி 80 ரன்கள் விளாசினார்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 340 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால் 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.