வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இலங்கை சார்பில் லக்மல் 4 விக்கெட்டும் , சமீரா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து இருந்தது. திரிமானே 55 ரன் எடுத்தார். சண்டிமால் 34 ரன்னும், தனஞ்செய டி சில்வா 23 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது. 3ம் நாள் முடிவில் இலங்கை 8 விக்கெட்டுக்கு 250 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது. சண்டிமால் 44 ரன்னும், தனஞ்செய டி சில்வா 39 ரன்னும், நிசாங்கா 49 ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. நிசாங்கா அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 258 ரன்னில் ஆட்டமிழந்தது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேமர் ரோச் 3 விக்கெட்டும், அல் ஜாரி ஜோசப் , ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டும், கேப்ரியல், கெய்ல் மேயர்ஸ், பிளாக்வுட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
96 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. கேம்ப்பெல் 10 ரன்னிலும், பிளாக்வுட்18 ரன்னிலும் அவுட்டாகினர்.
கேப்டன் பிராத்வெயிட் அரை சதம் கடந்தார். அவர் 85 ரன்னில் ஆட்டமிழந்தார். கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜேசன் ஹோல்டர் அரை சதம் அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஹோல்டர் 71 ரன்னும், ஜோஷ்வா டி சில்வா20 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 377 ரன்களை இலக்காக கொண்டு இலங்கை அணி களமிறங்கியது. நான்காம் நாள் முடிவில் இலங்கை விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.