LATEST UPDATESTAMIL
2வது ஒரு நாள் போட்டி; நியூசிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது.
இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சு தேர்வு செய்த நிலையில், நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.
இதன்படி, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மார்டின் குப்தில் (79), நிகோலஸ் (41) ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர்.
ஆனால், அவர்கள் ஆட்டமிழந்த பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனால், நியூசிலாந்து அணி 197 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனால், 250 ரன்களுக்குள் அந்த அணி சுருண்டு விடும் என எதிர்பார்த்த நிலையில், ரோஸ் டெய்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவினார்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஸ் டெய்லர் (73) ரன்கள் எடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்களை குவித்துள்ளது.
இதன் மூலம் இந்திய அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில், சஹால் 3 விக்கெட்டுகளையும் தாகூர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா (24) மற்றும் மயங்க் அகர்வால் (3) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த கேப்டன் கோலி (15) ரன்களில் வெளியேறினார்.
ஸ்ரேயாஸ் அய்யர் (52) அரை சதம் பூர்த்தி செய்துள்ளார். எனினும், 20 ஓவர் போட்டி தொடரில் அதிரடி காட்டிய ராகுல் (4) ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
அவரை தொடர்ந்து கேதர் ஜாதவ் (9), ஷர்துல் தாகூர் (18), சைனி (45) மற்றும் சாஹல் (10) ரன்களில் வெளியேறினர்.
இதன்பின் விளையாடியவர்களில் ஜடேஜா அடித்து விளையாடினார்.
அதிரடி காட்டிய அவர் அரை சதம் கடந்துள்ளார்.
எனினும் 48.3வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா 251 ரன்களே எடுத்தது. ஜடேஜா (54) ரன்களுக்கு ஆட்டமிழந்து உள்ளார்.
அவருடன் விளையாடிய பும்ரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதனால் நியூசிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் வெற்றி பெற்றுள்ளது.