CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
2வது ஒருநாள் போட்டி – ஜிம்பாப்வே அணியை 2-0 என வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1- என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே அணியின் முன்னணி வீரர்களை விரைவில் அவுட்டாக்கினர்.
அந்த அணியின் வில்லியம்ஸ் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 75 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரியன் சாரி 25 ரன்னிலும், பிரெண்டன் டெய்லர் 36 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், ஜிம்பாப்வே அணி 45.1 ஓவரில் 206 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் இப்திகார் அகமது 5 விக்கெட்டும், முகமது மூசா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான அபித் அலி 21 ரன்னிலும், இமாம் உல் ஹக் 49 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 35.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபர் அசாம் 77 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை ராவல்பிண்டியில் நடைபெறுகிறது.