TAMIL

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு பிரியம் கார்க் கேப்டன்

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 13-வது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 17-ந் தேதி முதல் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடக்கிறது.



இதில் 4 முறை சாம்பியனான இந்தியா, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, 2 முறை சாம்பியனான பாகிஸ்தான், தலா ஒரு முறை சாம்பியனான இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

நடப்பு சாம்பியன் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் முதல்முறையாக தகுதி பெற்ற ஜப்பான் மற்றும் நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும்.

உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி, தென்ஆப்பிரிக்கா சென்று அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அடுத்து அங்கு நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட 4 நாட்டு அணிகள் பங்கேற்கும் போட்டி தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நியூசிலாந்து ஆகியவை இந்த போட்டியில் பங்கேற்கும் மற்ற 3 அணிகளாகும். இந்த போட்டிக்கான இந்திய அணியில் உலக கோப்பை அணியினருடன் கூடுதல் வீரராக ஐதராபாத்தை சேர்ந்த ரக்‌ஷன் இடம் பிடித்துள்ளார்.

19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அகில இந்திய ஜூனியர் தேர்வு கமிட்டியினர் மும்பையில் நேற்று தேர்வு செய்து அறிவித்தனர். அணியின் கேப்டனாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் பிரியம் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி வீரர்கள் வருமாறு:-

பிரியம் கார்க் (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, திவ்யான்ஷ் சக்சேனா, துருவ் சந்த் ஜூரெல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷாஸ்வாத் ரவாத், திவ்யான்ஷ் ஜோஷி, ஷூபாங் ஹெஜ்டே, ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, அதர்வா அங்கோல்கர், குமார் குஷக்ரா, சுஷாந்த் மிஸ்ரா, வித்யாதர் பட்டீல்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker