TAMIL
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்கிறது
* 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியினர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
பயிற்சிக்கு இடையில் அவர்கள் 2 நாட்களை மைசூரு மாவட்டத்தில் உள்ள நாகர்ஹோல் தேசிய பூங்காவில் செலவிட்டு இருக்கிறார்கள்.
அவர்கள் பாதுகாப்பான வாகனம் மூலம் அங்குள்ள புலிகள் சரணாலயத்தையும் பார்வையிட்டுள்ளனர்.
வீரர்கள் மத்தியில் நல்ல பாச பிணைப்பு ஏற்படும் நோக்கில் இந்த சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தேசிய கிரிக்கெட் அகாடமி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் 2022-ம் ஆண்டில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் பந்தயம் நீக்கப்பட்டது.
ஆனால் துப்பாக்கி சுடுதல் போட்டியை நடத்த வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் வற்புறுத்தி வருகிறது.
இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெறும் தருணத்தில் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடக்க இருப்பதாகவும், அதில் ஒவ்வொரு நாடுகளும் வெல்லும் பதக்கங்களை காமன்வெல்த் விளையாட்டு போட்டி பதக்கப்பட்டியலில் சேர்க்க திட்டமிட்டு இருப்பதாகவும் செய்தி வெளியானது.
ஆனால் அந்த மாதிரி திட்டம் எதுவுமில்லை என்று காமன்வெல்த் விளையாட்டு பெடரேஷன் தலைவர் லூயிஸ் மார்ட்டின் மறுத்துள்ளார்.
* திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 30 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த இந்திய வீரர் ஷிவம் துபே 3 பவுண்டரி, 4 சிக்சர் விளாசினார்.
இந்த போட்டிக்கு பிறகு ஷிவம் துபே அளித்த பேட்டியில், ‘இந்த மைதானம் பெரியது என்று நான் நினைக்கிறேன்.
எந்த மைதானத்திலும் சிக்சர் அடிக்கும் திறமை என்னிடம் இருக்கிறது.
இந்த ஆட்டத்தில் அதனை நான் நிரூபித்து காட்டினேன்.
3-வது வீரராக நான் களம் இறங்கியதை பெரிய விஷயமாக கருதுகிறேன்.
தொடக்கத்தில் சற்று பதற்றம் இருந்தது.
அப்போது ரோகித் சர்மா எனக்கு ஊக்கம் அளித்தார். அவரது ஆலோசனை எனக்கு உத்வேகம் அளித்தது’ என்று தெரிவித்தார்.
* ஐ லீக் கால்பந்து போட்டியில் ரியல் காஷ்மீர் எப்.சி. அணியின் உள்ளூர் ஆட்டங்கள் ஸ்ரீநகரில் வருகிற 12, 15-ந் தேதிகளில் நடக்க இருந்தது.
பனி காரணமாக ஸ்ரீநகர் விமானநிலையம் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த 2 ஆட்டங்களும் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த போட்டிக்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அகில இந்திய கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.