TAMIL

16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடக்கம்

16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது.

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் 13–வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்கு உட்பட்டோருக்கான)

போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிப்ரவரி 9–ந் தேதி வரை நடக்கிறது.



இதில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

நடப்பு சாம்பியனும், அதிக முறை (4 தடவை) பட்டம் வென்ற இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

நியூசிலாந்து, இலங்கை, ஜப்பான் ஆகிய அணிகள் அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

தொடக்க ஆட்டத்தில்

தென்ஆப்பிரிக்கா–ஆப்கானிஸ்தான்

போட்டியை நடத்தும் தென்ஆப்பிரிக்க அணி ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

‘பி’ பிரிவில் வலுவான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் அங்கம் வகிக்கின்றன.

‘சி’ பிரிவில் பாகிஸ்தான் அணி இடம் பெற்றுள்ளது.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

கிம்பெர்லியில் இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா– ஆப்கானிஸ்தான் (டி பிரிவு) அணிகள் மோதுகின்றன.



இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்–3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்திய அணிக்கு வாய்ப்பு

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இலங்கையை 19–ந் தேதி எதிர்கொள்கிறது.

பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணியில் யா‌ஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவி பிஷ்னோய், கார்த்திக் தியாகி ஆகிய முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் ஐ.பி.எல். அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு இருப்பது நினைவுகூரத்தக்கது.

கடந்த முறை (2018–ம் ஆண்டு) பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

அதேபோல் இந்த முறையும் பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி மீண்டும் உச்சத்தை எட்ட அதிக வாய்ப்பு உள்ளது.

கடந்த காலங்களில் இந்த போட்டியில் களம் கண்ட விராட்கோலி, யுவராஜ் சிங், ஷேவாக், ஷிகர் தவான், ரோகித் சர்மா, இயான் மோர்கன், கிறிஸ் கெய்ல், டிம் சவுதி, அப்ரிடி, சர்ப்ராஸ் அகமது, கேன் வில்லியம்சன் உள்ளிட்ட வீரர்கள் பிற்காலத்தில் சர்வதேச போட்டியிலும் பெரிய அளவில் சாதித்து இருக்கிறார்கள்.



இதனால் இந்த ஜூனியர் உலக கோப்பை போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker