TAMIL
142 ஆண்டுகளில் முதல் முறை… இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை
இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனையை அந்த அணியில் நிகழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வென்று 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
2-வது போட்டி கேப்டவுனில் கடந்த 3 ஆம் திகதி தொடங்கியது. முதல் இன்னங்ஸில் இங்கிலாந்து அணி 269 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 89 ஓவர்களில் 223 ஓட்டங்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணித் தரப்பில் ஆன்டர்ஸன் 28-வது முறையாக 5 விக்கெட்டுகளையும், பிராட், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 142 ஆண்டுகளில் இல்லாத புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது முதல் இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் 5 கேட்சுசளைப் பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க வீரர்கள், ஹம்சா, டூபிளசிஸ், வேன் டர் டூசேன், பிரிடோரியஸ், நார்டே ஆகியோரின் விக்கெட்டுகளை ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்து வீழ்த்தினார்.
உலக அளவில் ஒரே இன்னிங்ஸில் 5 கேட்சுகளைப் பிடித்த 12-வது வீரர் எனும் முத்திரையை ஸ்டோக்ஸ் பதித்துள்ளார்.
இதற்கு முன் முதல்முறையாக கடந்த 1936-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸி. வீரர் ரிச்சார்ட்ஸன் 5 கேட்சுகளைப் பிடித்தார்.
இங்கிலாந்து அணியின் 142 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 கேட்சுகளை பிடித்த முதல் வீரர் என்று பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்று வரலாறு படைத்துவிட்டார்.