CRICKETSCHOOL SPORTSTAMIL
114ஆவது வடக்கின் பெரும் சமரில் ஒரு திருப்பம் ஏற்படுமா?
வடக்கின் பெரும் சமரில் இம்முறை யாழ் மத்திய கல்லூரி அணியினை இலங்கை இளையோர் தேசிய அணியினை பிரிதிநிதித்துவம் செய்தவரும், மூன்றாவது வருடமாக பெரும் சமரில் களம் காண்பவருமான விஜயகாந்த் வியாஸ்கந்த் தலைமை தாங்குகின்றார். இவருக்கு துணையாக அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான கமலராசா இயலரசன் செயற்படுகின்றார்.
சென் ஜோன்ஸ் கல்லூரி அணியினை, ஐந்தாவது வருட வீரராக இம்முறை ஆடவுள்ள நாகேந்திரராஜா சௌமியன் தலைமை தாங்குகின்றார். அணியின் உப தலைவராக, கடந்த வருட பெரும் சமரின் நாயகனான தெய்வேந்திரம் டினோஷன் செயற்பட்டு வருகின்றார்.
கடந்த வருடம் பெரும் சமரானது விறு விறுப்பிற்கு பஞ்சமில்லாது இரு அணிகளின் கைகளிற்கும் போட்டி மாறி மாறி நகர்ந்துகொண்டிருந்தது. இறுதியில் சமநிலையில் போட்டி நிறைவிற்கு வர 2018 ஆம் ஆண்டில் தசோபனது தலைமையில் ஏழு வருடங்களின் பின்னர் கிண்ணத்தினை மீட்ட மத்திய கல்லூரியினர், கிண்ணத்தினை தக்க வைத்தனர். சென் ஜோன்ஸ் அணியினர் 2017 ஆம் ஆண்டில் ஜெனி பிளெமிங்கின் தலைமையில் இறுதியாக வெறியொன்றினை பதிவு செய்துள்ளனர்.
இலங்கையின் பழமையான கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் சமர்களில் ஒன்றான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் போட்டியிடும் “வடக்கின் பெரும் சமர்” போட்டியானது, 1904ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை இடம்பெற்றுள்ள 113 சமர்களில் 36 போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரியும், 28 போட்டிகளில் மத்திய கல்லூரியும் வெற்றிபெற்றுள்ளன. 41 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. ஒரு போட்டி (1967) கைவிடப்பட்ட அதேவேளை, 7 போட்டிகளின் (1905, 1911-1914, 1925, 1927) முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
இந்த பருவகாலத்தினை பொறுத்தவரையில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள மத்திய கல்லூரி அணி எந்தவொரு தோல்வியினையும் சந்திக்காத பலமான அணியாக வளம் வருகின்றது. பிரிவு மூன்றின் முதலாவது தர அணிகளுக்கிடையிலான தொடரில் பங்கெடுத்து வரும் மத்திய கல்லூரி அணியினர் தமது குழுவில் முதலாவது இடத்தினை பிடித்திருப்பதுடன், காலிறுதிக்கு முந்தைய சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக காலிறுதியுடன் வெளியேறிய மத்திய கல்லூரி அணியினர் இம்முறை பிரிவு மூன்றின் வெற்றிக் கிண்ணத்தினையும் இலக்குவைத்துள்ளனர்.
அவர்கள் 6 போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றியினையும், 3 போட்டிகளில் வெற்றியினையும் பெற்றுள்ளனர். அதேவேளை, ஏனைய 3 போட்டிகளினையும் சமநிலையில் நிறைவுசெய்துள்ளனர். கொழும்பு வெஸ்லி கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி ஒன்றினை பெற்றிருக்கின்றமையும், மொரட்டுவ மகா வித்தியாலய அணிக்கெதிரான போட்டியினை சமநிலையில் நிறைவு செய்திருக்கின்றமையும் பருவகாலத்தில் அணியின் முக்கிய பெறுதிகளாக அமைகின்றன.
அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் முன் வரிசையில் இயலரசன் மற்றும் சன்சஜன் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். பருவகாலத்தில் அணியின் பலமாக மத்தியவரிசை துடுப்பாட்டமே காணப்படுகின்றது. மத்திய வரிசையில் மூன்று சத்தங்களினை பதிவு செய்துள்ள இளம் வீரரான கஜன், இந்த வருடத்தில் தன்னை முழுமையான சகலதுறை வீரராக மாற்றியுள்ளார்.
அதுபோன்றே, மூன்று சதங்களை பதிவு செய்துள்ள நிதுசன் அணித்தலைவர் வியாஸ்காந்த் மற்றும் அனுபவ விக்கெட் காப்பாளர் ராஜ்கிளின்டன் ஆகியோர் மத்திய களத்தை பலப்படுத்தும் வீரர்களாக உள்ளனர்.
பந்துவீச்சினை பொறுத்தவரையில் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்களிலேயே அணி தங்கியிருக்கின்றது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் விதுஷன் அணிக்காக அதிக விக்கெட்டுக்களை சாய்த்தவராக வலம் வருகின்றார். இவருக்கு துணையான சுழற்பந்து வீச்சாளர்களாக வியாஸ்காந்த், நிதுசன் இணை செயற்பட்டு வருகின்றது.
வேகப்பந்துவீச்சு இயலரசனின் கைகளில் தங்கியுள்ள அதேவேளை, திவாகரன் மற்றும் இளம் இடதுகை பந்துவீச்சாளர் கெளதம் ஆகியோர் அணிக்கு மேலதிக பலம் சேர்க்கின்றனர்.
பருவகாலத்தில் தோல்விகள் எதனையும் சந்திக்காது பெரும் சமரில் களமிறங்கும் மத்தியின் மைந்தர்களது ஒரே எதிர்பார்ப்பாக வெற்றியொன்றுடன் கிண்ணத்தினை தக்க வைப்பதாகவே இருக்கின்றது.
எதிர்பார்க்கப்படும் பதினொருவர் – திவாகரன், இயலரசன், சன்சஜன், சாரங்கன், நிதுசன், வியாஸ்காந்த், கஜன், ராஜ்கிளின்டன், கெளதம், விதுஷன்
சென் ஜோன்ஸ் கல்லூரி
பிரிவு இரண்டு போட்டித்தொடரில் பங்கெடுத்து வரும் சென் ஜோன்ஸ் அணியினர் தமது குழுவில் முதலாவது இடத்தினை பிடித்திருப்பதுடன், சராசரி புள்ளிகள் அடிப்படையிலான ஒட்டுமொத்த தரவரிசையில் நான்காவது இடத்தினையும் தாமதாக்கியுள்ளனர். எனினும், இவர்கள் துரதிஷ்டவசமாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் களுத்துறை மகா வித்தியாலய அணியுடனான போட்டியில் தோல்வியடைந்து இரண்டு நாள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.
பருவகாலத்தில் 16 போட்டிகளில் பங்கெடுத்த சென் ஜோன்ஸ் அணியினர் 3 இன்னிங்ஸ் வெற்றிகள் உட்பட 5 போட்டிகளில் வெற்றியினை பதிவு செய்துள்ளனர். மேலும் 5 போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்துள்ளதுடன் எஞ்சிய 6 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளனர்.
அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் முன் வரிசையில் அனுபவ வீரர் தனுஜன் மற்றும் அவருடன் இணைந்து சுகேதன் அணியின் துடுப்பாட்டத்தினை ஆரம்பிக்கின்றனர்.
அடுத்த இடங்களில் அணிக்காக இந்த பருவகாலத்தில் பல முக்கிய இன்னிங்ஸ்களை ஆடியிருக்கின்ற வினோஜன் களமிறங்குகின்றார். சென் ஜோன்ஸ் அணியின் துடுப்பாட்டமும் மத்திய வரிசையின் கைகளிலேயே தங்கியுள்ளது. மத்திய வரிசையினை பொறுத்தவரையில், இந்த பருவகாலத்தில் அணிக்காக அதிக ஓட்டங்களை குவித்திருப்பவரும் ஒரு இரட்டை சதம் உட்பட இரு சத்தங்களினை பெற்றிருக்கும் டினோஷன் மற்றும் சிரேஷ்ட அணிக்காக தனது முதலாவது சதத்தினை பதிவு செய்திருக்கும் இளம் சகலதுறை வீரரான அன்டன் அபிஷேக், அணியின் தலைவர் சௌமியன் மற்றும் விக்கெட் காப்பாளர் சபேசன் ஆகியோரும் களம்காண்கின்றனர்.
இவர்களுக்கு மேலதிகமாக பிரணவன், ஹரிசன் இணையும் துடுப்பாடத்தில் சோபிக்க வல்லவர்கள்.
பந்துவீச்சினை பொறுத்தவரையில் அறிமுக வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான விதுஷன் 80 இற்கும் அதிகமான விக்கெட்டுக்களை சாய்த்து அணியின் நம்பிக்கைக்குரியவராக விளங்குகிறார். இவருக்கு இணையான பெறுதியினை அணியின் சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளரான சரணும் பெரும் சமரில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். off ஸ்பின் பந்து வீச்சில் பிரகாசிக்கும் வினோஜனும் தன்னை ஒரு முழுமையான சகலதுறை வீரராக உருவாக்கியிருக்கின்றார்.
வேகப்பந்துவீச்சு அபிஷேக், டினோஷான் இணையிலே பெரும்பாலும் தங்கியிருக்கின்ற போதும் சுகேதனும் முக்கிய தருணங்களில் கைகொடுக்க வல்லவர்.
பருவகாலத்தில் தொடர்ச்சியாக சோபிக்காவிட்டாலும், மிக மிக பலமான அணிகளுக்கு எதிராக இலகு வெற்றியினை பதிவு செய்துள்ள சென் ஜோன்ஸ் அணி, இலகுவான அணிகளுக்கு எதிராக தடுமாறியிருக்கின்றது. எது எவ்வாறாக இருப்பினும் ஒவ்வொரு போட்டி முடிவுகளும் அன்றைய நாளின் பெறுதியினை வெளிப்படுத்தும்.
இளம் அணியொன்றுடன் களமிறங்குகின்ற போதும் மத்திய கல்லூரியிடமிருந்து கிண்ணத்தினை மீட்பதே சென் ஜோன்ஸ் அணியின் ஒரே நோக்கமாக இருக்கின்றது.
எதிர்பார்க்கப்படும் பதினொருவர் – தனுஜன், சுகேதன், வினோஜன், சபேசன், டினோஷான், சௌமியன், அபிஷேக், பிரணவன், ஹரிசன், சரண், விதுஷன்
இறுதியாக,
இந்த வருடம் இரு அணிகளும் சுழற்பந்துவீச்சாளர்களை முதுகெலும்பாக கொண்டு பயணித்திருக்கின்ற போதும், பெரும் சமரில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவது வழமை.
அண்மைய போட்டிகளின் முடிவுகளினை பொறுத்தவரையில் மத்திய கல்லூரியின் கைகள் ஓங்கியிருக்கின்றபோதும், போட்டிகளின் தரத்தினை பொறுத்தவரையில் இரு அணிகளினையும் சமமாகவே கணிக்க வேண்டும்.
இரு அணி வீரர்களும் நம்பிக்கையுடன் களமிறங்கி, தமது சிறந்த பெறுதிகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் கடந்த இரு ஆண்டுகளை விடவும் மிக சிறந்த ஒரு கிரிக்கெட்டினை நாம் ரசிக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மார்ச் மாதம் 5 ஆம் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் மத்திய கல்லூரி மைதானத்தில் நேரடியாகவும், உலகம் முழுவதும் Thepapare.com வாயிலாகவும் வடக்கின் அதிசிறந்த கிரிக்கெட் போட்டியினை நாம் கண்டு அனுபவிக்க முடியும்.