TAMIL

வேகப்பந்து வீச்சை சந்திக்க பயமா? – ரோகித் குற்றச்சாட்டுக்கு தவான் பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், முன்னாள் வீரர் இர்பான் பதானுடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் கலந்துரையாடினார்.

அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தவான் அளித்த பதில் வருமாறு:

கேள்வி: உங்களுக்கு பிடித்தமான இந்திய கேப்டன்?

பதில்: டோனி, விராட் கோலி ஆகியோரின் தலைமையின் கீழ் மட்டுமே விளையாடி இருக்கிறேன். இப்போதைக்கு டோனியை தேர்வு செய்கிறேன்.

கேள்வி: உங்களுடைய சிறந்த பேட்டிங் பார்ட்னர்?

பதில்: ரோகித் சர்மா.

கேள்வி: தற்போதைய இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் யார்?

பதில்: விராட் கோலி.

கேள்வி : உங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான பவுலர்?

பதில்: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை (4 முறை இவரது பந்து வீச்சில் ஆட்டம் இழந்திருக்கிறார்) சொல்வேன்.

கேள்வி: சமீபத்தில் ஒரு உரையாடலில், நீங்கள் ஒரு போதும் இன்னிங்சின் முதல் பந்தை அதுவும் வேகப்பந்து வீச்சாக இருந்தால் சந்திப்பதில்லை என்று சக தொடக்க வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளாரே?

பதில்: இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் ஒரு தொடக்க ஆட்டக்காரர். இந்திய அணிக்காக இந்த வரிசையில் 8 ஆண்டுகளாக ஆடுகிறேன். வேகப்பந்து வீச்சை சந்திக்க எனக்கு பயம் கிடையாது. முதல் ஓவரில் வேகப்பந்து வீச்சை சந்திக்காவிட்டால், அடுத்த ஓவரில் எதிர்கொள்ளப்போகிறேன் அவ்வளவு தான். அதே சமயம் ஆட்டத்தின் முதல் பந்தை நான் சந்திக்க விரும்புவதில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். இருப்பினும் தொடக்க வீரர் என்னை விட இளம் வீரராக இருந்து அவரும் முதல் பந்தை ஆடுவதில் அசவுரியமாக உணர்ந்தால் நானே முதல் பந்தை சந்திப்பேன். 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் முதல் முறையாக ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய போது முதல் பந்தை சந்திக்கும்படி அவரிடம் கூறினேன். அந்த நடைமுறை மாற்றமின்றி இப்போதும் தொடருகிறது.

இவ்வாறு தவான் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker