CRICKETLATEST UPDATESNEWSTAMIL
வெஸ்ட் இண்டீஸ் பாலோஆன் – நியூசிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 460 ரன் குவித்தது. ஹென்றி நிக்கோலஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 174 ரன்னும் , வாக்னர் 66 ரன்னும் எடுத்தனர். கேப்ரியல் , அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டும், செமர் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 இழப்புக்கு 124 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. பாலோ ஆனை தவிர்க்க மேலும் 137 ரன் தேவை, கைவசம் 2 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து விளையாடியது.
வெஸ்ட் இண்டீஸ் அணி மேலும் 7 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 2 விக்கெட்டை இழந்தது. அந்த அணி 56.4 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் பாலோ ஆன் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் சவுத்தி, ஜேமிசன் தலா 5 விக்கெட் வீழ்த்தினார்கள். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை துவம்சம் செய்து விட்டனர்.
பாலோஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் 329 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது.
நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி 2-வது இன்னிங்சிலும் திணறியது. 170 ரன் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்டை இழந்தது. கேம்பல் அதிகபட்சமாக 68 ரன்னும், புரூக்ஸ் 36 ரன்னும் எடுத்தனர். போல்ட் 3 விக்கெட்டும், ஜேமிசன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
7-வது விக்கெட்டான கேப்டன் ஹோல்டர்- ஜோஸ்வா ஜோடி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 244 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தனர்.
இந்த டெஸ்டிலும் நியூசிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அணி ஹேமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 134 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இதன்மூலம் நியூசிலாந்து டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றுகிறது. ஏற்கனவே 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை அந்த அணி 2-0 என்ற கணக்கில் வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.