TAMIL
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் நிகோலஸ் பூரனுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை – பந்தை நகத்தால் சேதப்படுத்தியதால் ஐ.சி.சி. அதிரடி
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வளரும் நட்சத்திரமான விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
லக்னோவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி முழுமையாக கைப்பற்றியது. இதில் கடந்த 11-ந்தேதி நடந்த 3-வது ஆட்டத்தின் போது நிகோலஸ் பூரனின் சில நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தின. அது குறித்து கள நடுவர்கள் பிஸ்மில்லா ஷின்வாரி, அகமது துரானி ஆகியோர் போட்டி நடுவரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சியில், அவர் பந்தை தனது பேண்ட் துணியில் நீண்ட நேரம் தேய்ப்பதும், அப்போது மறைமுகமாக பெருவிரல் நகத்தால் பந்து மீது அழுத்தி சுரண்டி அதன் தன்மையை மாற்ற முயற்சிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி. போட்டி நடுவர், பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக அவருக்கு நான்கு சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாட நேற்று தடை விதித்தார். அத்துடன் 5 தகுதிநீக்க புள்ளியும் விதிக்கப்பட்டது. இதன்படி லக்னோவில் இன்று தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று 20 ஓவர் போட்டிகளிலும், இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடக்கும் முதலாவது 20 ஓவர் போட்டியிலும் (டிச.6-ந்தேதி) அவரால் விளையாட முடியாது. அவருக்கு பதிலாக ராம்டின் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார்.
நிகோலஸ் பூரன் கூறுகையில், ‘நான் தவறு செய்து விட்டேன். இந்த தண்டனையை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். இதற்காக எனது அணியினர், ஆதரவாளர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, வலுவான வீரராக மீண்டு வருவேன். மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காது என்று உறுதி அளிக்கிறேன்’ என்றார்.
24 வயதான நிகோலஸ் பூரன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இதுவரை 16 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 535 ரன்களும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 14 ஆட்டங்களில் 274 ரன்களும் எடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் 50 பந்துகளில் 67 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய அவர் ரூ.4.2 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.