TAMIL
வெஸ்ட் இண்டீஸ் உடனான இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்திய அணி 387 ரன்கள் குவிப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு இந்திய அணியை முதலாவதாக பேட் செய்ய அழைத்தார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர்.
கடந்த ஆட்டத்தின் போது சொற்ப ரன்களில் வெளியேறிய இந்த ஜோடி, இந்த முறை தங்கள் அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்த ரோகித் சர்மா (17 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள்) 107 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தார்.
இதன் மூலம் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 28 வது சதத்தை பதிவு செய்தார்.
மறுபுறம் கே.எல்.ராகுல் (8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள்) 103 பந்துகளில் 100 ரன்களை கடந்தார்.
இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 3 வது சதத்தை பதிவு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் பவுலர் அல்ஜாரி ஜோசப் வீசிய 37 வது ஓவரில் கே.எல்.ராகுல் (102 ரன்கள் 104 பந்துகள்) கேட்ச் ஆனார். இந்நிலையில் இந்திய அணி 34 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது.
இதன் பின்னர் 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய இந்திய கேப்டன் விராட் கோலி, முதல் பந்திலேயே ரோஸ்டன் சேசிடம் கேட்ச் ஆகி விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ரோகித் சர்மா(159 ரன்கள் 138 பந்துகள்) காட்ரல் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்(3 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள்) 53 ரன்களுடன் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார்.
களத்தில் அதிரடி காட்டிய ரிஷ பண்ட்(3 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள்) 16 பந்துகளில் 39 ரன்களை விளாசிய நிலையில் கீமோ பவுலிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் எடுத்தது. கேதர் ஜாதவ் (16 ரன்கள்) மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 388 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.