TAMIL

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? – 2வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.



தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 287 ரன்கள் சேர்த்த போதிலும் அதை கொண்டு எதிரணியை கட்டுப்படுத்த முடியவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஹெட்மயரும், ஷாய் ஹோப்பும் சதம் அடித்து தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இந்திய அணியில் கேப்டன் கோலி 4 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இதே போல் துணை கேப்டன் ரோகித் சர்மாவின் மந்தமான பேட்டிங்கும் (56 பந்தில் 36 ரன்) ரன்வேகத்துக்கு முட்டுக்கட்டை போடுவது போல் அமைந்தது.

சென்னை ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது.

ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் தலா 10 ஓவர்கள் பந்து வீசிய போதிலும் ஒரு விக்கெட்டும் எடுக்காதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

அறிமுக வீரர் ஷிவம் துபே 7.5 ஓவர்களில் 68 ரன்களை வாரி வழங்கினார்.



விசாகப்பட்டினம், பொதுவாக பேட்டிங்குக்கு உகந்த மைதானம் ஆகும்.

இங்கு 300 ரன்களுக்கு மேல் குவித்தால் தான் சவாலான ஸ்கோராக இருக்கும். எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து ஆடுவது அவசியமாகும்.

ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் மிடில் வரிசையில் அரைசதம் அடித்தனர். அவர்கள் பார்முக்கு வந்திருப்பது அணிக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகும்.

இது இந்தியாவுக்கு வாழ்வா- சாவா? ஆட்டமாகும்.

இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும்.

இன்றைய ஆட்டத்திலும் இந்தியா தோல்வி கண்டால் சில பெருமைகளை இழக்க வேண்டி இருக்கும்.



இந்திய மண்ணில் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் 2 ஆட்டங்களை வென்று கடைசி 3 ஆட்டங்களில் தோற்று தொடரை பறிகொடுத்தது.

விசாகப்பட்டினத்திலும் இந்தியா சறுக்கினால், கடந்த 15 ஆண்டுகளில் உள்ளூரில் தொடர்ச்சியாக 2 ஒரு நாள் தொடர்களை இழந்த முதல் நிகழ்வாக இருக்கும்.

மேலும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 5 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி இதற்கு முன்பு தோற்றதில்லை.

அந்த மோசமான சாதனையும் ஒட்டிக் கொள்ளும்.

பொல்லார்ட் தலையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியினர் தொடக்க ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைப்பார்கள்.

சென்னை ஆட்டத்தில் ஹெட்மயரும், ஷாய் ஹோப்பும் 2-வது விக்கெட்டுக்கு திரட்டிய 210 ரன்களே இலக்கை விரட்டும் போது வெஸ்ட் இண்டீசின் சிறந்த பார்ட்னர்ஷிப்பாகும்.

சூழ்நிலைக்கு தக்கபடி இருவரும் பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.



இதே போல் பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் காட்ரெல், அல்ஜாரி ஜோசப் மிரட்டினர்.

இதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் வரிந்து கட்டி நிற்பார்கள்.

இதனால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

இந்த ஆண்டில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதல் 3 இடங்களில் விராட் கோலி (1,292 ரன்), ரோகித் சர்மா (1,268 ரன்), வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் (1,225 ரன்) உள்ளனர்.

தொடரின் முடிவில் இவர்களில் யார் ‘நம்பர் ஒன்’ ஆகப்போகிறார்கள் என்பது சுவாரஸ்யமான அம்சமாகும்.

விசாகப்பட்டினத்தில் இதுவரை 8 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன.

இதில் இந்திய அணி 6-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டம் சமன் (டை) ஆனது. இதில் 5 ஆட்டங்களில் 2-வது பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.



2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 356 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும்.

கடந்த ஆண்டு இங்கு இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதிய பரபரப்பான ஆட்டம் சமனில் (இரு அணியும் தலா 321 ரன்கள் எடுத்தன) முடிந்தது நினைவிருக்கலாம்.

இந்த மைதானம் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு மிகவும் ராசியானதாகும்.

இங்கு இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களில் 3 சதம், 2 அரைசதம் அடித்திருக்கிறார்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா அல்லது யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது ஷமி.

வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் அல்லது இவின் லீவிஸ், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், கீரன் பொல்லார்ட் (கேப்டன்), ஜாசன் ஹோல்டர், கீமோ பால், ஹேடன் வால்ஷ், அல்ஜாரி ஜோசப், ஷெல்டன் காட்ரெல்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இந்திய வீரர்களுடன் இணைந்து பும்ரா பயிற்சி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 26 வயதான ஜஸ்பிரித் பும்ரா, கடந்த ஆகஸ்டு மாதம் வெஸ்ட் இண்டீசில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது முதுகு வலியால் பாதிக்கப்பட்டார்.

அதன் பிறகு எந்த போட்டியிலும் ஆடாத பும்ரா இங்கிலாந்துக்கு சென்று சிறப்பு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்றார்.



ஆபரேஷன் தேவைப்படவில்லை என்ற போதிலும் காயத்தன்மை பெரியதாகி சிக்கலாகி விடக்கூடாது என்பதால் அவர் விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் கவனமுடன் கையாள்கிறது.

இந்த நிலையில் காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு விட்ட பும்ரா நேற்று விசாகப்பட்டினத்தில் இந்திய வீரர்களுடன் இணைந்து உற்சாகமாக வலை பயிற்சியில் ஈடுபட்டார்.

சக வீரர்களான ரிஷாப் பண்ட், மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே உள்ளிட்டோருக்கு அவர் பந்து வீசினார்.

அவரது பந்து வீச்சில் அகர்வால், பண்ட் தடுமாறியதை பார்க்க முடிந்தது.

பும்ராவின் பந்து வீச்சை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, தேர்வாளர் தேவங் காந்தி ஆகியோர் உன்னிப்பாக கண்காணித்தனர்.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பும்ரா அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஐ.பி.எல். ஏலம் முக்கியமல்ல’ – வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப்

“ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் குறித்து எங்கள் அணியின் சில வீரர்களது மனதில் நிச்சயம் இருக்கும்.



அவர்கள் ஏலத்தை ஆர்வமுடன் எதிர்நோக்குவார்கள்.

ஆனால் அவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

இங்கு நாங்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட வந்திருக்கிறோம்.

இப்போது அது தான் முக்கியம்”

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker