TAMIL
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 288 ரன்கள் குவித்தது
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர்.
இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷெல்டன் காட்ரெல் வீசிய பந்தில் லோகேஷ் ராகுல் 6 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆனார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் 3 ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய இந்திய கேப்டன் விராட் கோலி (4 ரன்கள்) காட்ரெல் வீசிய பந்தில் ஸ்லிப்பில் ஆட நினைத்து பந்து பேட்டின் அடிப்பகுதியில் உரசி போல்ட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
ரோகித் சர்மா 36 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் நிதானமாக ஆடி அரைசதத்தைக் கடந்தனர்.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் (7 பவுண்டரிகள் 1 சிக்ஸர்) 71 ரன்கள் எடுத்த நிலையில் ஹெட்மேயர் வீசிய பந்தில் கேட்ச் ஆனார்.
இதனைத் தொடர்ந்து வந்த கேதர் ஜாதவ் 40 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தனது முதல் ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய சிவம் துபே 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. தீபக் சாஹர்(7 ரன்கள்) மற்றும் முகமது ஷமி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 289 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.