TAMIL
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி ‘திரில்’ வெற்றி
இலங்கைக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இதன் முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது.
இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. தனது 9-வது சதத்தை நிறைவு செய்த ஷாய் ஹோப் 115 ரன்கள் (140 பந்து, 10 பவுண்டரி) விளாசினார்.
கேப்டன் பொல்லார்ட் 9 ரன்னில் கேட்ச் ஆனார்.
அடுத்து களம் இறங்கிய இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ (50 ரன்), கேப்டன் கருணாரத்னே (52 ரன்) இருவரும் அரைசதம் அடித்து சூப்பர் தொடக்கம் தந்தனர்.
அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்ததால் கடைசி கட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
8-வது வரிசையில் இறங்கிய ஹசரங்கா டி சில்வா (4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன், நாட்-அவுட்) ஒரு வழியாக தங்கள் அணியை கரைசேர்த்தார்.
இலங்கை அணி 49.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 290 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. 2-வது ஒரு நாள் போட்டி 26-ந்தேதி நடக்கிறது.