TAMIL

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 369 ரன்னுக்கு ஆல்-அவுட்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்து இங்கிலாந்து தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது.

ஆலிவர் போப் 91 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 56 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை சாதகமாக பயன்படுத்திய வெஸ்ட்

இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை நன்கு ஸ்விங் செய்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.

ஆலிவர் போப், கேப்ரியலின் பந்து வீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற கார்ன்வால் தவற விட்டார். என்றாலும் கேப்ரியலின் அடுத்த ஓவரில் போப் (91 ரன்) கிளன் போல்டு ஆனார்.

பட்லர் (67 ரன்), கிறிஸ் வோக்ஸ் (1 ரன்), ஜோப்ரா ஆர்ச்சர் (3 ரன்) வரிசையாக பெவிலியன் திரும்பினர்.

அப்போது இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 300 ரன்களை தொடுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பிராட் மிரட்டினார்.

வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டிய பிராட் அரைசதம் கடந்து அசத்தினார். அவரும், டாம் பெஸ்சும் இணைந்து 9-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் திரட்டி அணிக்கு வலுவூட்டினர்.

ஸ்டூவர்ட் பிராட் 62 ரன்களும் (45 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), அடுத்து வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் 11 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 111.5 ஓவர்களில் 369 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. டாம் பெஸ் 18 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் 4 விக்கெட்டுகளும், கேப்ரியல், ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையும் சேர்த்து கெமார் ரோச்சின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 201 ஆக (59 டெஸ்ட்) உயர்ந்தது. இந்த இலக்கை கடந்த 9-வது வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஆவார்.

1994-ம் ஆண்டுக்கு பிறகு 200 விக்கெட் மைல்கல்லை எட்டிய முதல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் என்ற பெருமையையும் 32 வயதான கெமார் ரோச் பெற்றார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தகிடுதத்தம் போட்டது.

47.1 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker