TAMIL
வெற்றியை அநாகரீகமாக கொண்டாடுவதா? வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு இந்திய கேப்டன் கண்டனம்
தென்ஆப்பிரிக்காவில் நடந்த 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்கு உட்பட்டோர்) போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் அக்பர் அலி தலைமையிலான வங்காளதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 4 முறை சாம்பியனான இந்திய அணியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
தங்களது வெற்றியை வங்காளதேச வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடினார்கள்.
அவர்களது செயல்பாடுகள் எதிரணியினரை எரிச்சல் அடைய செய்யும் வகையில் இருந்தது.
அத்துடன் அவர்கள் இந்திய வீரர்களுடன் தள்ளு-முள்ளுவிலும் ஈடுபட்டனர்.
முன்னதாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் ஒவ்வொரு முறை பந்து வீசும் போதும் இந்திய பேட்ஸ்மேன்களை வெறுப்பூட்டும் வகையில் கேலி செய்தார்.
வங்காளதேச அணியின் எல்லை மீறிய வெற்றி கொண்டாட்டத்துக்கு இந்திய அணியின் கேப்டன் பிரியம் கார்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘போட்டியில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். தோல்வியை நாங்கள் எளிதாக தான் எடுத்து கொண்டோம்.
ஆனால் வங்காளதேச அணியினர் வெற்றி பெற்றதும் உணர்ச்சியை வெளிப்படுத்திய விதம் அநாகரீகமானது.
இதுபோல் அவர்கள் நடந்து கொண்டிருக்கக்கூடாது’ என்றார்.
வங்காளதேச அணி வீரர்களின் செயலுக்கு அந்த அணியின் கேப்டன் அக்பர் அலி வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இதுபோல் நடந்து இருக்கக்கூடாது.
என்ன நடந்தது என்பது எனக்கு சரியாக தெரியவில்லை.
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதால் ஆர்வத்தின் காரணமாக வீரர்கள் இப்படி உணர்ச்சியை அதிகமாக வெளிப்படுத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இளம் வீரர்கள் என்பதால் அதிக ஆக்ரோஷம் காட்டிவிட்டார்கள்.
எந்த நிலையிலும் எதிரணிக்கு மதிப்பு அளிக்க வேண்டும். கண்டிப்பாக ஆட்டத்தை மதிக்க வேண்டும்.
கிரிக்கெட் ஜென்டில்மேன் ஆட்டமாகும். எங்களது வீரர்கள் நடந்து கொண்ட விதத்திற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.